திருப்பரங்குன்றத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருப்பரங்குன்றத்தில் உள்ள 4 டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி தி.மு.க. உள்பட அனைத்துக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றத்தின் பிரதானமான பஸ் நிலையம், தினசரி காய்கறி சந்தை, ரெயில்வே நிலையம், மாதந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் வரக்கூடிய கிரிவல பாதை மற்றும் வீர ஆஞ்சநேயர் கோவில் என இவை அமைந்துள்ள ஒரே பகுதியில் அடுத்தடுத்து 4 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடையால் அக்கம்பக்கத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கும், அவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதில் ஒரு டாஸ்மாக் கடை அரசுப்பள்ளி அருகில் உள்ளது. இதனால் அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த கடைகளை அகற்ற வேண்டும் என்று திருப்பரங்குன்றம் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் கடந்த சில மாதங்களாகவே தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
இதற்கிடையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் அனைத்து மாதர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தை அடுத்து, 40 நாளில் 4 டாஸ்மாக் கடைகளையும் அப்புறப்படுத்துவதாக போலீசார் முன்னிலையில் டாஸ்மாக் அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் அதன்படி டாஸ்மாக் கடைகள் அகற்றப்படவில்லை.
இதனைத்தொடர்ந்து அனைத்துக்கட்சி சார்பில் திருப்பரங்குன்றத்தில் உள்ள 4 டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்துவது என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் முன்பு அனைத்துக்கட்சியினரும் திரண்டனர். அப்போது அங்கு வந்த கலால் அதிகாரி மதிவாணன், பார் தொடர்பான வழக்கு இருப்பதாகவும், தற்காலிகமாக கடையை மூடுவதாகவும் கூறினார். இதையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
இருப்பினும் நிரந்தரமாக டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி அனைத்துக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி தலைமையில் தி.மு.க. பகுதி செயலாளர் கிருஷ்ணபாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், தாலுகா செயலாளர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன், மாவட்ட துணை தலைவர் மகேந்திரன், தே.மு.தி.க. சார்பில் கணபதி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மகாமுனி, த.மா.கா. சார்பில் ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.