பொது சேவை மையங்கள் மூலம் விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்
பொது சேவை மையங்கள் மூலம் விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் தங்களை இணைத்து கொள்ளலாம் என்று கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் கடந்த 2016–17–ம் ஆண்டு முதல் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சத்து 4 ஆயிரம் விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டு பயன்பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டும் விழுப்புரம் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், கம்பு, பருத்தி, மக்காச்சோளம், மணிலா மற்றும் தோட்டக்கலை பயிர்களான வாழை, மஞ்சள், மரவள்ளி மற்றும் வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீட்டு செய்து கொள்ளலாம். இதற்கான காப்பீட்டு கட்டணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் காப்பீட்டு முகவர்கள் மூலம் பெறப்படுகிறது. இந்த ஆண்டு விவசாயிகளின் நலன் கருதி தற்போது அரசால் புதியதாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள பொது சேவை மையங்களை அணுகி காப்பீட்டு கட்டணம் செலுத்தி தங்களை இந்த திட்டத்தின் கீழ் இணைத்துக்கொள்ளலாம்.
விவசாயிகள் ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக முதல் பக்கம், சிட்டா, அடங்கல் ஆகியவற்றை எடுத்துச்சென்று நேரடியாக பொது சேவை மையங்களில் காப்பீட்டு கட்டணத்தை செலுத்தலாம். வங்கியில் பயிர் கடன் பெறும் விவசாயிகளுக்கு அந்தந்த வங்கிகள் மூலம் காப்பீட்டு கட்டணம் பெறப்படும். எனவே விவசாயிகள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.