ரூ.6½ லட்சம் மோசடி வழக்கில் வங்கி மேலாளருக்கு உடந்தையாக இருந்த நண்பரும் கைது
மகளிர் குழுவினருக்கு கடன் தருவதாக கூறி ரூ.6 லட்சத்து 35 ஆயிரம் மோசடி செய்த வங்கி மேலாளர் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த போந்தவாக்கத்தில் தனியார் வங்கி ஒன்று உள்ளது. அந்த வங்கியில் அதே பகுதியை சேர்ந்த 3 மகளிர் சுயஉதவிக்குழுவினர் கடனுதவி வேண்டி அந்த வங்கியின் மேலாளர் தினகரன் (வயது 22) என்பவரை அணுகி உள்ளனர். கடன் பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக கூறிய அவர் பின்னர் மறுத்து விட்டார். ஆனால் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடன் வழங்கியதாக வங்கியில் இருந்து ரூ.6 லட்சத்து 35 ஆயிரத்தை மோசடியாக எடுத்து விட்டு தலைமறைவாகி விட்டார்.
இது குறித்து அறிந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் தினகரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூரில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். குற்றப்பிரிவு போலீசார் கடந்த 20–ந்தேதி தினகரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நண்பரும் கைது
இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஞானவேல், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் போலீசார் இந்த வழக்கு தொடர்பாக மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட வங்கி மேலாளர் தினகரனின் நண்பரான மேலக்கடம்பூரை சேர்ந்த யுவராஜ் (22) என்பவர் அவருக்கு உடந்தையாக செயல்பட்டு பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூர் அருகே பதுங்கியிருந்த யுவராஜை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story