பணிகுறைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


பணிகுறைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Aug 2017 4:30 AM IST (Updated: 2 Aug 2017 1:02 AM IST)
t-max-icont-min-icon

பணிகுறைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மந்தாரக்குப்பத்தில் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெய்வேலி,

நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் 1ஏ–வில் மின்னியல் மற்றும் எஸ்.எம்.டி. பகுதியில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நாட்கள் குறைக்கப்பட்டு மாதத்தில் 19 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படும் என்று என்.எல்.சி. இந்தியா நிறுவனம் அறிவித்தது. இதற்கு ஒப்பந்த தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மாதம் 12–ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இவர்களது போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், அனைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பினரும் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம், முற்றுகை, பேரணி, கோரிக்கை மனு கொடுப்பது என பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இருப்பினும், இவர்களது போராட்டம் முடிவுக்கு வரவில்லை.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வடலூரில் ஒப்பந்த தொழிலாளர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஒப்பந்த தொழிலாளர்கள் மந்தாரக்குப்பத்தில் உள்ள மாவட்ட வருவாய் நில எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி, ஒப்பந்த தொழிலாளர்கள் மந்தாரக்குப்பத்தில் உள்ள மாவட்ட வருவாய் நில எடுப்பு அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் ஒன்று திரண்டனர். பின்னர், அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக மாவட்ட வருவாய் நில எடுப்பு அலுவலகம் நோக்கி புறப்பட்டனர். அவர்களை அலுவலக நுழைவு வாயில் முன்பு போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஒப்பந்த தொழிலாளர்கள் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாவட்ட வருவாய் நில எடுப்பு அலுவலரை சந்தித்து மனு கொடுத்துவிட்டு அனைவரும் கலைந்து செல்வது என முடிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் பா.ம.க. மாநில துணை செயலாளர் அசோக்குமார், மாவட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் சிலர் மாவட்ட வருவாய் நில எடுப்பு அலுவலர் சந்திரசேகரனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அப்போது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நில எடுப்பு) உமாமகேஷ்வரி, நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், விருத்தாசலம் தாசில்தார் பன்னீர்செல்வம், மந்தாரக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சீனுவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story