தேவை அடிப்படையில் மட்டுமே அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட வேண்டும்


தேவை அடிப்படையில் மட்டுமே அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட வேண்டும்
x
தினத்தந்தி 2 Aug 2017 3:15 AM IST (Updated: 2 Aug 2017 1:12 AM IST)
t-max-icont-min-icon

கிராமப்பகுதிகளில் அத்தியாவசிய தேவை அடிப்படையில் மட்டுமே அரசு பள்ளிகளை தரம் உயர்த்தி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் இருந்தாலும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இல்லாத நிலையில் அப்பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் அருகில் உள்ள நகர்புறங்களிலோ அல்லது வெகு தொலைவில் உள்ள கிராமப்புறங்களிலோ உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்குரிய போக்குவரத்து வசதி மற்றும் பொருளாதார வசதி இல்லாத நிலையில் கிராமத்து மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகும் நிலை ஏற்படுகின்றது.

கிராமத்து மாணவ, மாணவிகளின் சிரமத்தை குறைக்கின்ற வகையில் ஒவ்வொரு கல்வியாண்டிலும் தமிழக அரசின் பள்ளிகல்வித்துறை கிராமப்புறங்களில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாகவும், நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாகவும், உயர்நிலை பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி வருகின்றது. இவ்வாறு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் போது ஒரே பகுதியில் அடுத்தடுத்துள்ள பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டால் தரம் உயர்த்தியதற்கான பலன் கிடைக்காத நிலை ஏற்படுகின்றது.

உதாரணமாக கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி மற்றும் திருச்சுழி யூனியன் பகுதிகளில் அடுத்தடுத்துள்ள கிராமப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதால் அந்த பள்ளிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை தான் அதிகரித்ததே தவிர மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. ஆனால் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள சில கிராம உயர்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக உள்ள நிலையில் அந்த பள்ளிக்கு அருகில் உள்ள பிற கிராமத்து பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்காததால் பிரச்சினை ஏற்படுகின்றது. நடப்பு கல்வியாண்டிலும் சிவகாசி பகுதிகளில் அடுத்தடுத்து உள்ள 4 கிராமங்களில் உள்ள உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் தரம் உயர்த்துவதால் ஏற்படும் பலன் கிடைக்க போவதில்லை.

எனவே பள்ளிகல்வித்துறை கிராமத்து பள்ளிகளை தரம் உயர்த்தும் போது முறையாக கணக்கெடுப்பு நடத்தி அத்தியாவசிய தேவையின் அடிப்படையில் பள்ளிகளை தரம் உயர்த்தினால் தான் பள்ளிகளை தரம் உயர்த்துவது அர்த்தமுள்ளதாக இருக்கும். எதிர்பார்க்கும் பலனும் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். எனவே பள்ளிகல்வித்துறை பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு முறையான வழிமுறையினை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கல்வியாண்டு தொடங்கி 3 மாதங்களுக்கு பின்பு பள்ளிகளை தரம் உயர்த்துவது தடுக்கப்பட்டு கல்வியாண்டு தொடக்கத்திலேயே பள்ளிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியமாகும்.


Next Story