கோத்தகிரியில் குடிநீர் திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கோத்தகிரி நகருக்கு செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி பேரூராட்சி 30.93 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். கோத்தகிரி நகர மக்களுக்கு ஈளாடா தடுப்பணையில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது மக்கள் தொகை பெருக்கம், விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள் அதிகரித்ததால் கோத்தகிரி நகர மக்களுக்கு போதுமான தண்ணீர் வினியோகிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
எனவே தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க பேரூராட்சி நிர்வாகம் லாரிகளில் தண்ணீர் வினியோகித்து வருகிறது. இந்த ஆண்டு போதிய அளவு பருவமழை பெய்யாததாலும், வெயில் காரணமாகவும் ஈளாடா தடுப்பணை வறண்டது. இதனால் 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை, ஒரு சில மணி நேரம் மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள் சிலர் காசு கொடுத்து லாரித்தண்ணீர் வாங்கி தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோத்தகிரி நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பயன் பெறும் வகையில் அளக்கரை கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ரூ.10 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கடந்த 2014–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணிகள் தொடங்கியது.
இதற்காக தாழ்வான பகுதியில் உள்ள அளக்கரை ஆற்றில் பெரியஅளவில் தண்ணீர் சேகரிக்கும் தொட்டி கட்டப்பட்டது. அங்கிருந்து கொண்டு வரப்படும் தண்ணீர் தடையின்றி சீராக செல்வதற்காக என கீரைக்கல், அரவேனு, தவிட்டுமேடு, டானிங்டன் ஆகிய இடங்களில் நீர் உந்து நிலையங்கள், நீர்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டன. மேலும் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு பெரிய இரும்பு குழாய்களும் பதிக்கப்பட்டன.
அளக்கரை கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் ஏறத்தாழ முடிவடைந்த நிலையில் தண்ணீரை கொண்டு வந்து சேகரித்து வினியோகம் செய்வதற்காக சக்திமலை பகுதியில் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில் நீர்த்தேக்கத்தொட்டி மற்றும் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் இந்த பணி இன்னும் முடிவடையாமல் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
இந்த திட்டத்தை ஒரு ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்ட அதிகாரிகள் தற்போது 3 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் கூட பணிகளை முடிக்காமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அளக்கரை கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் மணல் விலை உயர்வு காரணமாக ஒப்பந்ததாரர் பணியை தாமதப்படுத்தி வந்ததாகவும். இன்னும் ஓரிரு மாதத்திற்குள் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து வருகிறார்கள்.
இதே போலகோத்தகிரி நகர மக்களின் முக்கியமான குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஈளாடா தடுப்பணை 90 மீட்டர் நீளமும், 66 மீட்டர் அகலமும், 8 அடி உயரமும் கொண்டதாகவும், 1 கோடியே 50 லட்சம் லிட்டர் தண்ணீர் சேகரித்து வைக்கும் நிலையில் இருந்தது. வறட்சி காலத்தில் இந்த தடுப்பணை வறண்டு விடுவதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் தடுப்பணையை தூர்வாரி பக்கவாட்டு சுவர்கள் கட்ட கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. இதனிடையே சில நாட்கள் மழை பெய்ததால் தூர்வாரும் பணி முற்றிலுமாக கைவிடப்பட்டது. இதனால் அந்த நிதி வீணானது.
இதைத்தொடர்ந்து கடந்த 6 மாதத்துக்கு முன்பு தடுப்பணையை தூர்வாரி பக்கவாட்டு சுவர் கட்டும் பணிக்காக மீண்டும் ரூ.40 லட்சம் நிதியை பேரூராட்சி நிர்வாகம் ஒதுக்கியது. தடுப்பணை முன்பு இருந்ததை விட கொள்ளளவை மூன்று மடங்கு அதிகப்படுத்தும் வகையில் அணை தூர்வாரப்பட்டு அதிலிருந்து எடுக்கப்பட்ட வண்டல் மண் விவசாயிகளுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. ஆனால் பக்கவாட்டு சுவர் கட்டும் பணி தாமதமாக நடைபெற்று வருவதால் மீண்டும் தொடர்ந்து மழை பெய்தால் இந்த பணியும் தடைபடும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
இந்த குடிநீர் திட்டப்பணிகளும் தாமதமாகி வருவதால் பொதுமக்கள் தொடர்ந்து குடிநீருக்காக சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே அளக்கரை கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் ஈளாடா தடுப்பணை பக்கவாட்டு சுவர் கட்டும் பணி ஆகியவற்றை விரைந்து முடிந்து கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.