ராயப்பேட்டை, அரசு முஸ்லிம் பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்களின் பெற்றோர் போராட்டம்


ராயப்பேட்டை, அரசு முஸ்லிம் பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்களின் பெற்றோர் போராட்டம்
x
தினத்தந்தி 2 Aug 2017 4:00 AM IST (Updated: 2 Aug 2017 2:02 AM IST)
t-max-icont-min-icon

ராயப்பேட்டை அரசு முஸ்லிம் பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்களின் பெற்றோர் ‘திடீர்’ போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

சென்னை ராயப்பேட்டை தாயார் சாகிப் தெருவில் உள்ள அரசு முஸ்லிம் உயர்நிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ளது. ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனி வகுப்பறைகள் உள்ளன. நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ்-1 வகுப்பு தொடங்க அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பரிசோதனைக்கூடம், வகுப்பறை கட்டிடம் என அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் பிளஸ்-1 வகுப்பை தொடங்கக்கூடாது என்று கூறி பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தினர் பள்ளியை முற்றுகையிட்டு நேற்று ‘திடீர்’ போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்டமைப்பு வசதி

இதுகுறித்து பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எம்.அப்சர் பாஷா நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு முஸ்லிம் உயர்நிலைப்பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்து வருகிறோம். இந்த நிலையில் பிளஸ்-1 வகுப்பை நடப்பு ஆண்டு முதல் தொடங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே சமயத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எதுவும் மேம்படுத்தப்படவில்லை.

மாறாக 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் வெளியே வைத்து பாடம் கற்பித்து கொடுக்குமாறு கூறுகின்றனர். ஆண்கள், பெண்கள் தனித்தனியாக தற்போது படித்து வருகின்றனர். பிளஸ்-1 வகுப்பை இருபாலரும் இணைந்து படிக்கும் வகையில் நடத்த சொல்கின்றனர்.

கலாசாரம்

இது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு நாங்கள் மனுவும் கொடுத்துள்ளோம். மாணவிகள் ‘பர்தா’ அணியக்கூடாது என்றும், மாணவர்கள் தொப்பி அணியக்கூடாது என்றும் நிர்ப்பந்தம் செய்கின்றனர்.

முஸ்லிம் அல்லாத ஆசிரியர்கள் பாடம் நடத்தினால் மத கலாசாரம் பாதிக்கப்படும். ஆகவே அவர்களை உடனடியாக நீக்கிவிட்டு, முஸ்லிம் ஆசிரியர்களை பணியில் சேர்க்கவேண்டும். இல்லையென்றால் நாங்கள் எங்களுடைய பிள்ளைகளின் மாற்றுச்சான்றிதழ் களை (டி.சி.) வாங்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story