லாரி மோதி பிளஸ்-2 மாணவர் பலி டிரைவர் கைது
தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது லாரி மோதி பிளஸ்-2 மாணவர் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
செங்குன்றம்,
சென்னை பெரம்பூர் மதுரைசாமி மடத்தை சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன். அயனாவரத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் யுகேந்திரா (வயது 16).
இவர் புழல் சூரப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். யுகேந்திரா தினமும் பள்ளிக்கு, பள்ளி பஸ்சில் சென்று வருவது வழக்கம்.
நேற்று காலை முரளிகிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளில் யுகேந்திராவை ஏற்றிக்கொண்டு அவரை பள்ளியில் விடுவதற் காக சென்று கொண்டிருந்தார்.
லாரி மோதி பலி
புழல் ரெட்டேரி அருகே ஜி.என்.டி. சாலையில் சென்றபோது மூலக்கடையில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட யுகேந்திரா படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே யுகேந்திரா பரிதாபமாக உயிரிழந்தார். முரளிகிருஷ்ணன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
டிரைவர் கைது
இது குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரியை ஓட்டி வந்த உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த துர்காபிரசாத் (36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story