பரங்கிமலை ஒன்றிய அலுவலகத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. உள்ளிருப்பு போராட்டம்
பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாம்பரம்,
சென்னையை அடுத்த சிட்லபாக்கம் பிரதான சாலையில் பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. அங்கு நேற்று மாலை தாம்பரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா ஆய்வு செய்வதற்காக சென்றார். அப்போது அலுவலகத்தின் உள்ளே அ.தி.மு.க.வை சேர்ந்த மகேஷ் என்பவர் அலுவலக இருக்கையில் அமர்ந்து கொண்டு அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அவரை கண்ட எம்.எல்.ஏ. ராஜா, ‘இவர் யார் எதற்காக அலுவலகத்தின் உள்ளே அமர்ந்து கொண்டு அரசு அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருக்கிறார்’ என கேள்வி எழுப்பினார்.
வாக்குவாதம்
அதற்கு மகேஷ், ‘நான் அ.தி.மு.க. காஞ்சி மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனின் உதவியாளர், நீங்கள் எதற்காக இங்கு வந்து என்னை கேள்வி கேட்கிறீர்கள்’ என்று பதில் அளித்தார்.
அதற்கு அவர், தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. என்றும், தான் அரசு அலுவலகத்தை பார்வையிட உரிமை உள்ளது என்றும் பதில் அளித்தார்.
இதில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. தகவலறிந்த சிட்லபாக்கம் போலீசார் ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று இருதரப்பினரிடையே சமரச பேச்சில் ஈடுபட்டனர்.
உள்ளிருப்பு போராட்டம்
பரங்கிமலை ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகள் புரோக்கர்கள் துணையுடன் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் மாவட்ட கலெக்டர் நேரில் வந்து புரோக்கர்களின் ஆதிக்கம் குறித்து உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அலுவலகத்தை விட்டு செல்வேன் என கூறி எம்.எல்.ஏ. ராஜா உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது 200-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எம்.எல்.ஏ.விடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட கலெக்டர் போன் மூலம் நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி அளித்தார். இரவு 9.30 மணிக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.வை சந்தித்து சமாதானப்படுத்தினார்.
கலைந்து சென்றனர்
2 நாட்களில் கலெக்டர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என அதிகாரிகளிடம் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். அதன்பின்னர் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க.வினர் கலைந்து சென்றனர்.
தி.மு.க. எம்.எல்.ஏ. போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சிட்லபாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story