கட்டிட தொழிலாளி கொலையில் வாலிபர் கைது


கட்டிட தொழிலாளி கொலையில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 2 Aug 2017 4:45 AM IST (Updated: 2 Aug 2017 2:16 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டையாம்பட்டியில் நடந்த கட்டிட தொழிலாளி கொலையில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆட்டையாம்பட்டி,

ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் சேகர். கட்டிட தொழிலாளியான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டையாம்பட்டியில் உள்ள சுடுகாட்டில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்தும், அவரை கொலை செய்தவர்கள் யார்? எனவும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில், கட்டிட தொழிலாளி சேகர் கொலை சம்பந்தமாக நைனாம்பட்டி ராஜீவ்காந்தி தெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் கோவிந்தராஜூ (வயது 28) என்பவர் நேற்று காலை ராஜாபாளையம் கிராம நிர்வாக அலுவலர் துரைசாமி முன்பு சரண் அடைந்தார்.

இதையடுத்து அவர் ஆட்டையாம்பட்டி போலீசில் கோவிந்தராஜூவை ஒப்படைத்தார். பின்னர், சேகர் கொலை வழக்கில் அவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக போலீசில் கோவிந்தராஜூ அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

விசைத்தறி கூடத்திற்கு தினமும் வேலைக்கு சென்று வருவேன். ஒருநாள் சேகர் என்னை ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தினான். சம்பவத்தன்று நாங்கள் இருவரும் மதுபோதையில் இருந்தோம். அப்போது சேகரின் விருப்பத்தை நிறைவேற்றிய பிறகு செலவுக்காக பணம் கேட்டேன். ஆனால் அவர் தரமறுத்துவிட்டார். பின்னர், நான் அவரிடம் இருந்து 300 ரூபாயை கட்டாயப்படுத்தி எடுத்துக்கொண்டேன். இதனால் கோபம் அடைந்த சேகர் போலீசில் சொல்வேன் என மிரட்டினார். பிறகு பயந்துபோன நான், வெளியில் சத்தம்போட்டால் தெரியும் என்பதற்காக சேகரின் வாயில் செருப்பை திணித்து துணியால் கட்டி கல்லை தலையில் தூக்கிப்போட்டு கொலை செய்தேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள கோவிந்தராஜூ ஏற்கனவே கொலை மிரட்டல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Tags :
Next Story