ரவுடி ஸ்ரீதர் மகனிடம் மேலும் ஒரு வாரம் விசாரணை நடத்த அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு


ரவுடி ஸ்ரீதர் மகனிடம் மேலும் ஒரு வாரம் விசாரணை நடத்த அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 2 Aug 2017 4:15 AM IST (Updated: 2 Aug 2017 2:38 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் பிரபல ரவுடி ஸ்ரீதர் மகனிடம் மேலும் ஒரு வாரத்திற்கு விசாரணை நடத்த அனுமதி வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. காஞ்சீபுரம் கோர்ட்டு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால் அவரை பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவித்தது.

தற்போது அவர் வெளிநாடுகளில் பதுங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரவுடி ஸ்ரீதரின் மகன் சந்தோஷ்குமார் (வயது 24) லண்டனில் இருந்து சென்னை வந்தபோது சி.பி.சி.ஐ.டி. போலீசார் மடக்கி காஞ்சீபுரம் கொண்டுவந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் அவரது பாஸ்போர்ட்டை முடக்கி வைத்தனர்.

ஐகோர்ட்டு அனுமதி

இதற்கிடையே சந்தோஷ்குமார் தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தார். அப்போது ரவுடி ஸ்ரீதர் செய்த ஒரு கொலை வழக்கில் முக்கிய தடயங்கள் சந்தோஷ்குமாரின் மடிக்கணினி மற்றும் செல்போனில் உள்ளது, எனவே அவரிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு போலீசார் ஐகோர்ட்டில் மனு செய்தனர். மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள், சந்தோஷ்குமார் பெரிய காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் 14 நாட்கள் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதையொட்டி கடந்த 19-ந்தேதி முதல் சந்தோஷ்குமார் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். நேற்றுடன் இந்த விசாரணை முடிவடைந்தது.

மேலும் ஒரு வாரம் விசாரணை

இந்த நிலையில் விசாரணை அதிகாரிகளான இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், சரவணன் ஆகியோர் இன்னும் முழுமையாக விசாரித்து முடிக்கவில்லை என்றும், இன்னும் ஒரு வாரத்திற்கு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தனர்.

மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள், மேலும் ஒரு வார காலத்திற்கு சந்தோஷ்குமாரிடம் விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். 

Next Story