பெண் போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வு தொடங்கியது


பெண் போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 2 Aug 2017 12:30 PM IST (Updated: 2 Aug 2017 11:49 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பெண் போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வு தொடங்கியது.

சேலம்,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2-ம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு கடந்த ஜூன் மாதம் நடந்தது. மொத்தம் 15,711 பேர் தேர்வு எழுதினர். சேலம், நாமக்கல் மாவட்டத்தில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் உடற்தகுதி தேர்வு கடந்த மாதம் 27-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. 3,822 ஆண்களுக்கும், 782 பெண்களுக்கும் தேர்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. கடந்த 4 நாட்களாக ஆண்களுக்கு நடந்த தேர்வில் 3,432 பேர் கலந்து கொண்டனர். இதில் 2,197 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு இன்று(புதன்கிழமை)முதல் உடற்திறன் தேர்வுகள் நடக்க உள்ளது. அதாவது கயிறு ஏறுதல், 400 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் வைத்து தேர்வு நடக்கிறது.

இந்த நிலையில் நேற்று காலை சேலம், நாமக்கல் மாவட்டத்தில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு தொடங்கியது. நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக ஆயுதப்படை மைதானத்தில் மழைநீர் தேங்கி நின்றது. அதை அப்புறப்படுத்திய பின்னரே தேர்வு தொடங்கியது. அதாவது வழக்கமாக காலை 6 மணிக்கு தொடங்க இருந்த தேர்வு ஒரு மணிநேரம் தாமதமாக காலை 7 மணிக்குதான் தொடங்கியது.
சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார், சேலம் சரக டி.ஐ.ஜி. செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஆகியோர் முன்னிலையில் தேர்வு நடைபெற்றது. அப்போது பெண்களுக்கு உயரம் அளவீடு செய்யும் தகுதித்தேர்வு நடந்தது. உயரம் அளவீட்டில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. உயரம் அளவீடு செய்யும்போது, ஒவ்வொருவரின் உயரமும் தனித்தனியாக வீடியோவால் பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக உடற்தகுதி தேர்வில் பங்கேற்க வந்த பெண்களின் பெற்றோர் மைதானத்துக்குள் வர அனுமதிக்கப்பட வில்லை. அதையொட்டி பெற்றோர் ஆயுதப்படை மைதானத்திற்கு அருகே வெளியில் காத்திருந்தனர்.

Next Story