வேலூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 28 ஆயிரம் கழிவறைகள் கட்ட நடவடிக்கை
வேலூர் மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியங்களில் இருக்கும் 743 ஊராட்சிகளில் 3 லட்சத்து 28 ஆயிரம் கழிவறை கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டை,
திருப்பத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆலங்காயம், கந்திலி மற்றும் நாட்டறம்பள்ளி ஆகிய ஒன்றியத்திற்கான திறந்தவெளி மலம் கழித்தல் பழக்கத்தை அகற்றி வட்டாரங்கள் உருவாக்கம் குறித்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் ஆசிரியர் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். திட்ட இயக்குனர் பெரியசாமி, சிவராமன், செயற் பொறியாளர் ராஜவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் இளவரசன் வரவேற்றார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராமன் பேசியதாவது:–
மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் சுகாதாரத்தில் சிறந்து விளங்குகிறது. தற்போது கிராம பஞ்சாயத்துகளில் பஞ்சாயத்து தலைவர்கள் இல்லாததால், கிராம மக்களின் அடிப்படை தேவைகளை பஞ்சாயத்து செயலாளர்கள் கண்காணித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து பல்வேறு காய்ச்சல்கள் பரவ வாய்ப்பு உள்ளது. இதனால் கொசு மருந்து அடித்தல், கால்வாய் சுத்தம் செய்தல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் வேலூர் மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியங்களில் இருக்கும் 743 ஊராட்சிகளில் 3 லட்சத்து 28 ஆயிரம் கழிவறை கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் பிரேம்குமார் நன்றி கூறினார்.