இந்திரவனம் கிராமத்தில் பச்சையம்மன் கோவிலில் தீ மிதி விழா
சேத்துப்பட்டை அடுத்த இந்திரவனம் கிராமத்தில், வனபகுதியில் கிராம பாதுகாப்பு பச்சையம்மன் கோவில் உள்ளது.
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டை அடுத்த இந்திரவனம் கிராமத்தில், வனபகுதியில் கிராம பாதுகாப்பு பச்சையம்மன் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் ஆடி மாதம் 3–வது செவ்வாய்க்கிழமை தீமிதி விழா நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான தீமிதி விழா கடந்த மாதம் 28–ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
விழாவையொட்டி பெருமாள் உற்சவம், மாரியம்மன், பொன்னியம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா, மன்னார்சாமி, பச்சையம்மன் கல்யாணம் நடந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் கோவில் முன்பு தீ குண்டம் அமைத்து விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
மேலும் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். செம்முனி, கரும்முனி, ஜடாமுனி, வாமுனி ஆகிய முனிகளுக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. இரவில் பச்சையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக வீதிஉலா நடந்தது.