பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்


பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்
x
தினத்தந்தி 3 Aug 2017 4:00 AM IST (Updated: 3 Aug 2017 12:29 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தை அடுத்துள்ள பட்டணம்காத்தான் கிராமத்தில் உள்ள காட்டூருணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கலெக்டர் நடராஜன் கூறியதாவது:– ராமநாதபுரம் மாவட்டத்தில் 2016–17–ம் ஆண்டில் எதிர்பார்த்த அளவு வடகிழக்கு பருவ மழை பெய்யாத காரணத்தினால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடுமையான வறட்சி ஏற்பட்டது. மேலும் பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் நெல் மற்றும் இதர வேளாண் பயிர்களுக்கு 1 லட்சத்து 17 ஆயிரத்து 542 விவசாயிகளுக்கு 1 லட்சத்து 12 ஆயிரத்து 981 எக்டேர் பரப்புக்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மிளகாய் போன்ற தோட்டக்கலை விவசாயிகளுக்கு 10,044 விவசாயிகளுக்கு 8,220 எக்டேர் பரப்பிற்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டுஉள்ளது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2016–17–ம் ஆண்டு பிரதம மந்திரி புதிய வேளாண்மை பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் நெல்–2 பயிருக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையாக ரூ.355 கோடியே 28 லட்சம் வரப்பெற்றுள்ளது. இந்த தொகை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் வேளாண் காப்பீடு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ரூ.101 கோடி, வணிக வங்கிகள் மூலம் ரூ.5 கோடியே 87 லட்சம் மற்றும் வேளாண் காப்பீடு நிறுவனம் மூலம் ரூ.43 கோடியே 87 லட்சம் என பயிர் காப்பீடு தொகை செலுத்திய விவசாயிகளுக்கு அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மாவட்டத்தில் மொத்தம் 124 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நெல்–2 பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை விவசாயிகளின் வங்கி சேமிப்பு கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுஉள்ளன. இவ்வாறு அவர் கூறினார். அப்போது கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் முருகேசன் உடனிருந்தார்.


Next Story