தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் பெறாமல் பொது கட்டிடங்கள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை


தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் பெறாமல் பொது கட்டிடங்கள்  செயல்பட்டால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 3 Aug 2017 2:15 AM IST (Updated: 3 Aug 2017 12:33 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் பெறாமல் பொது கட்டிடங்கள் செயல்பட்டு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் பெறாமல் பொது கட்டிடங்கள் செயல்பட்டு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

பொதுக்கட்டிடங்கள்

தமிழ்நாடு பொதுக்கட்டிடங்கள் உரிமம் சட்டம் 1965–ன் படி பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பொதுக்கட்டிடங்களுக்கு உரிமம் பெற்று இருக்க வேண்டும். அதன்படி கல்வி நிறுவனங்கள் (பயிற்சி பள்ளிகள் மற்றும் பயிற்சி கல்லூரிகள் உள்பட), நூலகங்கள், சங்கங்கள், திருமண மண்டபங்கள், சினிமா தியேட்டர்கள்,அ சத்திரங்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களும் மற்றும் தரைதளம் 100 சதுர மீட்டர் (1074 சதுர அடி) கொண்ட அனைத்து பொதுகட்டிடங்களுக்கும் உரிமம் பெற வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இதுவரை உரிமம் பெறாதவர்கள் விரைந்து உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும். மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், மாநகராட்சி, நகரசபை, பஞ்சாயத்து அலுவலகங்கள் இயங்கும் கட்டிடங்களுக்கு உரிமம் பெற, தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் உதவி கலெக்டர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

தனியார் பொதுக்கட்டிடங்களுக்கான உரிமம் பெற, உரிமம் வழங்கும் அலுவலரான சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். திருமண மண்டபம், சினிமா தியேட்டர், ஓட்டல், கிளப்புகளுக்கு (ஒரு பிளாக்குக்கு) ரூ.5 ஆயிரமும், தனியார் பள்ளிக்கூடங்களுக்கு ரூ.1000 மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.500 உரிமக் கட்டணம் செலுத்த வேண்டும்.

கடும் நடவடிக்கை

மேலும் ஏற்கனவே உரிமம் பெற்றுள்ள நபர்கள் உரிய காலக் கெடுவுக்குள் அதனை புதுப்பித்து நடப்பில் வைத்திருக்க வேண்டும். உரிய உரிமம் பெறாமல் எந்தக் கட்டிடத்தையும் பொதுக்கட்டிடமாக பயன்படுத்தக்கூடாது. உரிமம் பெறாமலோ, காலாவதியான உரிமத்துடனோ பொதுக் கட்டிடங்கள் செயல்பட்டு வந்தால் அவை தடை செய்யப்படுவதோடு கட்டிட உரிமையாளர்கள், பொறுப்பாளர்கள் மீது கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்து உள்ளார்.


Next Story