சிவகங்கையில் பழமை வாய்ந்த தெப்பக்குளம் சீரமைப்பு பணி


சிவகங்கையில் பழமை வாய்ந்த தெப்பக்குளம் சீரமைப்பு பணி
x
தினத்தந்தி 3 Aug 2017 3:15 AM IST (Updated: 3 Aug 2017 12:39 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் பழமையான தெப்பக்குளத்தை குடி மராமத்து திட்டத்தில் சீரமைப்பு பணியை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை,

சிவகங்கை நகர் உருவாக்கப்பட்டபோது நகரின் மைய பகுதியில் உள்ள தெப்பகுளம் மற்றும் பழைய அரண்மனை முதன் முதலில் உருவாக்கப்பட்டது. சிவகங்கை நகருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ள இந்த தெப்பகுளம் சரிவர தூர்வாரப்படாமல் சேதமடைந்தது காணப்பட்டது. அத்யிடன் இந்த தெப்பக்குளம் முழுவதும் பிளாஸ்டிக் பாலிதீன் பைகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு தெப்பகுளம் மிகவும் அசுத்தமடைந்த நிலையில் இருந்தது.

இதையடுத்து இந்த பாரம்பரியம் மிக்க பழமை வாய்ந்த தெப்பகுளத்தை சீரமைத்து பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மலர்விழி ஏற்பாட்டின் பேரில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தெப்பக்குளத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சிவகங்கை உடைகுளம் ஈ.ஐ.டி. பாரி நிறுவனத்தினர் இணைந்து இந்த தெப்பகுளத்தை சீரமைக்கும் பணியை தொடங்கினர். இதன் தொடக்க விழா மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ தலைமையில் நடைபெற்றது. ஈ.ஐ.டி பாரி நிறுவன பொது மேலாளர் செந்தில்இனியன் முன்னிலை வகித்தார்.

சிவகங்கை கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி வரவேற்று பேசினார். விழாவில் உதவி பொது மேலாளர் லெட்சுமணன், சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன், ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் நானில்தாசன், சிவகங்கை தாசில்தார் நாகநாதன், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) அய்யனார், வக்கீல் கிருஷ்ணன், நல்லாசிரியர் கண்ணப்பன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story