நீதிமன்ற பஸ்நிறுத்தம் சுகாதாரகேடான இடத்திற்கு மாற்றம் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட நிழற்குடைகள் வீண்
மதுரை நீதிமன்ற பஸ் நிறுத்தம் சுகாதாரகேடான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் பஸ் நிறுத்தத்தில் அமைக்கப்பட்ட நிழற்குடைகள் வீணாக காட்சியளிக்கின்றன.
மதுரை,
மதுரை மாவட்ட கோர்ட்டு அமைந்துள்ள இடத்திற்கு அருகே நீதிமன்ற பஸ் நிறுத்தம் உள்ளது. ஒத்தக்கடை, ஐகோர்ட்டு,மேலூர், திருவாதவூர், திருமோகூர், மாட்டுத்தாவணி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு இந்த வழியாக தினமும் நூற்றுக்கணக்கான டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. முன்பு ஒன்று, இரண்டு பயணிகள் நிழற்குடை இருந்தது. நாளுக்குநாள் இங்கிருந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும், பஸ்களும் அதிகரிக்க தொடங்கின.
அதைதொடர்ந்து பயணிகள் வசதிக்காக நீதிமன்ற பஸ் நிறுத்தத்தில் அடுத்தடுத்து பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டன. மொத்தம் 6 நிழற்குடைகள் அங்கு வரிசையாக அமைந்துள்ளன. நவீன வடிவமைப்புடன் டைல்ஸ் பதிக்கப்பட்டு, இருக்கை வசதியுடன் இந்த நிழற்குடைகள் அமைந்துள்ளன. இந்த நிழற்குடைகள் கட்ட பல லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நீதிமன்ற பஸ் நிறுத்தம் இங்கிருந்து 50 அடி தூரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு பஸ் நிறுத்தம் என ஒரு போர்டு மட்டும் மரத்தில்கட்டி தொங்கவிடப்பட்டு உள்ளது. மழை, வெயிலுக்கு பயணிகள் ஒதுங்கி நிற்க முடியாத வெட்ட வெளியில் உள்ளது. அந்த இடத்திற்கு அருகே கழிவுநீர் தேங்கி உள்ளதால் சுகாதாரகேடும் நிலவுகிறது. மெயின்ரோடாக இருந்த போதிலும் இந்த இடத்தில் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
பஸ் நிறுத்தம் மாற்றப்பட்டு விட்டதால் ஏற்கனவே இருந்த பஸ் நிறுத்தத்தில் உள்ள 6 நிழற்குடைகள் காட்சிப்பொருளாகி விட்டன. இரவு நேரங்களில் சமூக விரோதிகளுக்கு தஞ்சம் அளிக்கும் இடமாகவும் மாறிவிட்டது. போக்குவரத்து நெருக்கடி காரணமாக மாற்றி உள்ளதாக கூறினால், புதிதாக அமைக்கப்பட்டுள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்து, பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்து விட்டு மாற்றி இருக்கலாம். அவசர கோலத்தில் அள்ளி தெளித்தார்போல் பயணிகளை இப்படி சிரமத்திற்கு உள்ளாக்கலாமா?
புதிய நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடைகள் அவசியம். அந்த இடத்தில் ரோட்டையும் சீரமைக்க வேண்டும். அதன் பின்பு பஸ் நிறுத்தத்தை மாற்றலாம். அதுவரை முன்பு இருந்த இடத்திலேயே பஸ் நிறுத்தம் செயல்பட வேண்டும் என்று பயணிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.