டிக்லாண்ட்லீஸ் கிராமத்தில் அட்டகாசம் செய்யும் சிங்கவால் குரங்கை பிடிக்க நவீன தானியங்கி கூண்டு


டிக்லாண்ட்லீஸ் கிராமத்தில் அட்டகாசம் செய்யும் சிங்கவால் குரங்கை பிடிக்க நவீன தானியங்கி கூண்டு
x
தினத்தந்தி 3 Aug 2017 3:30 AM IST (Updated: 3 Aug 2017 1:24 AM IST)
t-max-icont-min-icon

டிக்லாண்ட்லீஸ் கிராமத்தில் அட்டகாசம் செய்யும் சிங்கவால் குரங்கை பிடிக்க நவீன தானியங்கி கூண்டு வைக்கப்பட்டு உள்ளது. குரங்கை பிடிக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கொலக்கம்பை,

கொலக்கம்பை அருகே டிக்லாண்ட்லீஸ் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகளும், தேயிலை தோட்டங்களும் அதிகளவில் உள்ளன. இந்த நிலையில் அந்த வனப்பகுதியில் காட்டெருமை, சிறுத்தை, கரடி, உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபடுகின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு டிக்லாண்ட்லீஸ் கிராமத்தில் சிங்கவால் குரங்கு ஒன்று புகுந்தது. அந்த குரங்கு குடியிருப்பு பகுதியில் சுற்றி வருவதுடன் பொதுமக்களை கடித்து அச்சுறுத்துகிறது. மேலும் சிறுவர், சிறுமிகளை துரத்துவதால் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த வாரத்தில் மட்டும் 2 குழந்தைகள், 2 பெண்களை சிங்கவால் குரங்கு தாக்கி பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் குந்தா வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சிங்கவால் குரங்கு அட்டகாசம் செய்த பகுதியை பார்வையிட்டனர்.

இதை தொடர்ந்து குரங்கை பிடிக்க சில நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் கூண்டு வைத்தனர். ஆனால் கூண்டில் குரங்கு சிக்காமல் இருந்தது. இதையடுத்து நவீன தானியங்கி கூண்டு வைக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது தானியங்கி கூண்டு வைக்கப்பட்டு உள்ளதால் அட்டகாசம் செய்து வரும் சிங்கவால் குரங்கு விரைவில் பிடிபடும். குரங்கை பிடிக்க ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story