பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பெங்களூரு சிறையில் சசிகலாவுடன், டி.டி.வி. தினகரன் சந்திப்பு
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை, டி.டி.வி. தினகரன் நேற்று சந்தித்து பேசினார்.
பெங்களூரு,
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை, டி.டி.வி. தினகரன் நேற்று சந்தித்து பேசினார்.
சிறையில் சசிகலாசொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், பரப்பனஅக்ரஹாரா சிறையில் முறைகேடுகள் நடப்பதாகவும், ரூ.2 கோடி லஞ்சமாக பெறப்பட்டு சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா, சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ் மீது குற்றம்சாட்டினார். சிறை முறைகேடுகள் தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து சசிகலா சாதாரண கைதிகளை போல் சிறையில் நடத்தப்படுகிறார்.
கடந்த மாதம் 20–ந் தேதி சசிகலாவை சந்திக்க அ.தி.மு.க (அம்மா) அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சிறை வளாகத்துக்கு வந்தார். சிறை கைதிகளை பார்வையாளர்கள் சந்திப்பதற்கான நேரம் முடிந்துவிட்டதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அன்றைய தினம் அவரால் சசிகலாவை சந்திக்க முடியவில்லை. இதன் தொடர்ச்சியாக கடந்த 24–ந் தேதி சசிகலாவின் வக்கீல் அசோகன் உள்பட 3 வக்கீல்கள் சிறையில் சசிகலாவை சந்தித்தனர். கடந்த மாதம் (ஜூலை) 31–ந் தேதி இளவரசியின் மகன் விவேக், மகள் ஷகிலா, மருமகன் கார்த்திக்கேயன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் இளவரசியை சந்தித்து பேசினர்.
டி.டி.வி. தினகரன் சந்திப்புஇந்த நிலையில், நேற்று சசிகலாவை சந்திக்க டி.டி.வி. தினகரன் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு வந்தார். பின்னர், அவர் மாலை 4.20 மணிக்கு சிறைக்குள் சென்றார். அவருடன் அ.தி.மு.க. (அம்மா) அணியின் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, துணை செயலாளர் ராஜூ, ஆடிட்டர் சாமிநாதன், வக்கீல் கிருஷ்ணப்பன் ஆகியோரும் சென்றனர்.
இவர்கள் அனைவரும் சசிகலாவை சிறையின் உள்ளே சென்று சுமார் 1 மணிநேரம் 10 நிமிடங்கள் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பின் போது, கட்சியை வழிநடத்துவது யார்? என்பது தொடர்பாகவும், உட்கட்சி பூசல் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதனைத்தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் அவர்கள் அனைவரும் சிறையில் இருந்து வெளியே வந்தனர். இந்த சந்திப்பின்போது, சிறையில் உள்ள சசிகலா சாதாரண உடை அணிந்து அவர்களை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அரசியல் முக்கியத்துவம்அ.தி.மு.க. (அம்மா) அணியில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், டி.டி.வி.தினகரன் தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது. இந்த இரு அணிகள் இடையேயும் தற்போது மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. வருகிற 5–ந்தேதி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு செல்வேன் என்றும், கட்சி பணியில் தீவிரமாக ஈடுபடுவதாகவும் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அணியினர் அதனை விரும்பவில்லை என்றும், டி.டி.வி.தினகரனை ஓரங்கட்ட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டி.டி.வி.தினகரன், சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.