நடப்பு ஆண்டில் ஜூன், ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டிற்கு 7 டி.எம்.சி. காவிரி நீர் திறக்கப்பட்டு உள்ளது


நடப்பு ஆண்டில் ஜூன், ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டிற்கு 7 டி.எம்.சி. காவிரி நீர் திறக்கப்பட்டு உள்ளது
x
தினத்தந்தி 3 Aug 2017 2:30 AM IST (Updated: 3 Aug 2017 1:37 AM IST)
t-max-icont-min-icon

நடப்பு ஆண்டில் ஜூன், ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டிற்கு 7 டி.எம்.சி. காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது என்று மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.

பெங்களூரு,

நடப்பு ஆண்டில் ஜூன், ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டிற்கு 7 டி.எம்.சி. காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது என்று மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.

கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

7 டி.எம்.சி. தண்ணீர்

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து நடப்பு ஆண்டில் ஜூன், ஜூலை ஆகிய 2 மாதங்களில் 44 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் திறந்து இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்திற்கு இந்த 2 மாதங்களில் 7 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு போதிய மழை பெய்யவில்லை. அதனால் இந்த ஆண்டும் தண்ணீர் இடர்ப்பாட்டு ஆண்டாக தான் இருக்கும் என தோன்றுகிறது. கர்நாடகத்தில் கபினி, கே.ஆர்.எஸ்., ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய 4 அணைகளிலும் சேர்த்து மொத்தம் தற்போது 43.307 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஆனால் இந்த காலத்தில் வழக்கமாக 104.551 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருக்க வேண்டும்.

52.94 சதவீத நீர் பற்றாக்குறை

கடந்த ஜூன் மாதம் 1–ந் தேதியில் இருந்து ஜூலை 31–ந் தேதி வரை 57.832 டி.எம்.சி. தண்ணீர் 4 அணைகளுக்கு வந்துள்ளது. ஆனால் வழக்கமாக இந்த 2 மாதங்களில் சராசரியாக 122.888 டி.எம்.சி. தண்ணீர் வந்திருக்க வேண்டும். இதனால் 52.94 சதவீத நீர் பற்றாக்குறையாக கிடைத்துள்ளது. காவிரி படுகையில் உள்ள நகரங்களுக்கு குடிநீர் பயன்பாட்டுக்கு தினமும் 3 டி.எம்.சி. நீர் தேவைப்படுகிறது.

அடுத்த 3 மாதங்களில் அணைகளுக்கு ஓரளவுக்கு தண்ணீர் வரும் என்று எதிர்பார்க்கிறோம். இருந்தாலும் குடிநீருக்கு தேவையான தண்ணீரின் தேவையை மனதில் வைத்து, கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும். மேலும் இதுதொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை விரைவில் கூட்டி ஆலோசிக்கப்படும்.

காங்கிரஸ் பயப்படாது

மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீடு–அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு உள்ளது. மத்திய பா.ஜனதா அரசு வருமானவரித் துறையை தவறாக பயன்படுத்துகிறது. எனது வீட்டில் வருமானவரி சோதனை நடக்க வாய்ப்பு உள்ளது. ஒரு வாரத்திற்குள் எனது வீட்டிலும் இந்த வருமானவரி சோதனை நடக்கும் என்று பா.ஜனதாவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறினார்.

அரசியல் ரீதியாக காங்கிரசை அழிக்க பா.ஜனதா சதி செய்கிறது. இதற்கு காங்கிரஸ் கட்சி பயப்படாது. வருமானவரித் துறை என்பது ஒரு சுதந்திரமான அமைப்பு. அது சுதந்திரமாக பணியாற்ற வேண்டும். ஆனால் அரசியல் சதியில் அந்த அமைப்பு ஈடுபடுகிறது. பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி சித்தேஸ்வரின் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. கண்துடைப்புக்காக இந்த சோதனை நடத்தப்பட்டது. காங்கிரஸ் தலைவர்களை குறிவைத்து வருமானவரித் துறை சோதனைகளை நடத்துகிறது.

இவ்வாறு மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.


Next Story