சுதந்திர தினத்தையொட்டி லால்பாக் மலர் கண்காட்சி நாளை தொடங்குகிறது கவர்னர் தொடங்கி வைக்கிறார்
சுதந்திர தினத்தையொட்டி லால்பாக்கில் நாளை மலர்கண்காட்சி தொடங்குகிறது.
பெங்களூரு,
சுதந்திர தினத்தையொட்டி லால்பாக்கில் நாளை மலர்கண்காட்சி தொடங்குகிறது. இந்த மலர் கண்காட்சியை கவர்னர் வஜூபாய் வாலா தொடங்கி வைக்கிறார்.
நாளை தொடங்குகிறதுஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களையொட்டி லால்பாக் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சுதந்திர தினவிழாவையொட்டி லால்பாக் பூங்காவில் நடைபெற உள்ள மலர் கண்காட்சி குறித்து தோட்டக்கலைத்துறை கமிஷனர் பி.சி.ராய், பூங்கா மற்றும் தோட்டங்களின் துணை இயக்குனர் ஜெகதீஷ் ஆகியோர் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:–
சுதந்திர தினத்தையொட்டி வருகிற 4–ந் தேதி(நாளை) லால்பாக்கில் மலர் கண்காட்சி தொடங்குகிறது. அன்றைய தினம் மதியம் 1 மணிக்கு கவர்னர் வஜூபாய் வாலா மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். சுதந்திர தினமான 15–ந் தேதியுடன் மலர் கண்காட்சி முடிவடைகிறது. இந்த ஆண்டு மலர் கண்காட்சி மறைந்த கவிஞரும், ஞானபீட விருது பெற்றவருமான குவெம்புவை பெருமைப்படுத்தும் வகையில் நடைபெற உள்ளது. கண்ணாடி மாளிகையின் உள்ளே சிவப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை நிற ரோஜா பூக்களால் அவருடைய வீடு மாதிரி அமைக்கப்பட உள்ளது. ஜோக் நீர்வீழ்ச்சியின் மாதிரி உள்பட மலநாடு மாவட்டம் வண்ண மலர்களால் பார்வையாளர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட உள்ளன.
டிக்கெட் கட்டணம்மலர் கண்காட்சியை காண வார நாட்களில் வரும் பெரியவர் ஒருவருக்கு ரூ.50 எனவும், வார இறுதி நாட்களில் பெரியவர் ஒருவருக்கு ரூ.60 எனவும் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விடுமுறை நாட்களில் சிறுவர், சிறுமிகளுக்கு டிக்கெட் கட்டணம் ரூ.20 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மாணவ–மாணவிகள் இலவசமாக மலர்கண்காட்சியை பார்த்து ரசிக்கலாம்.
மலர் கண்காட்சியையொட்டி பாதுகாப்பு பணியில் 500 போலீசார் ஈடுபட உள்ளனர். 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. தீயணைப்பு உபகரணங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்படும். லால்பாக் பூங்கா அருகே மெட்ரோ ரெயில் இயங்குவதால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவில் பொதுமக்கள் மலர்கண்காட்சியை பார்த்து ரசிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.