தமிழ்ப்பல்கலைக்கழக நூலகம் உலக அளவில் சிறந்து விளங்க நடவடிக்கை எம்.எல்.ஏ. உறுதி


தமிழ்ப்பல்கலைக்கழக நூலகம் உலக அளவில் சிறந்து விளங்க நடவடிக்கை எம்.எல்.ஏ. உறுதி
x
தினத்தந்தி 3 Aug 2017 4:30 AM IST (Updated: 3 Aug 2017 1:53 AM IST)
t-max-icont-min-icon

உலக அளவில் தமிழ்ப்பல்கலைக்கழக நூலகம் சிறந்து விளங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவை நூலக குழு தலைவர் ராமலிங்கம் எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு சட்டப்பேரவை நூலக குழு தலைவர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையிலான குழுவினர் தஞ்சையில் 2 நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர். முதல்நாள் சரசுவதிமகால் நூலகத்தில் ஆய்வு மேற்கொண்ட குழுவினர் நேற்று 2-வது நாள் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக நூலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் சண்முகம், விஜயகுமார், ராமர், சின்னத்தம்பி, ஆண்டிஅம்பலம், கு.க.செல்வம், சீத்தாபதி, துணை செயலாளர் பெர்லின்ரூப்குமார் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இந்த குழுவினர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகம், சுவடிகள் துறை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கலெக்டர் அண்ணாதுரை, பல்கலைக்கழக பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சுபாஷினி, கோட்டாட்சியர் சுரேஷ், தாசில்தார் தங்கபிரபாகரன் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.

முன்னதாக தமிழ்ப்பல்கலைக்கழக வளாகத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் துணைவேந்தர் பாஸ்கரன் கூறியதாவது:-

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நூலகம் 1987-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந்தேதி தொடங்கப்பட்டது. நூலக கட்டிடம் பாராளுமன்ற கட்டிடத்தை போல் கட்டப்பட்டது. இங்கு 1 லட்சத்து 74 ஆயிரத்து 980 நூல்கள் உள்ளன. இதில் தமிழ்நூல்கள் 99 ஆயிரத்து 674-ம், ஆங்கிலம் 68 ஆயிரத்து 877-ம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிற மொழி நூல்கள் 6 ஆயிரத்து 429 நூல்களும் உள்ளன. இதில் ஆய்வு நூல்கள் 24 ஆயிரத்து 311-ம், அரிய நூல்கள் 20 ஆயிரமும், 335 நுண்படசுருள்களும் உள்ளன.

தமிழ்ப்பல்கலைக்கழகமாணவர்கள் மட்டும் அல்லாது தஞ்சை பகுதியில் உள்ள மருத்துவகல்லூரி மாணவர்கள், பொறியியல் கல்லூரி மாணவர்களும் இந்த நூலகத்தை பயன்படுத்தி வருகிறார்கள். 1 லட்சம் நூல்களை பெறும் வகையில் நூல்கள் கொடை இயக்கத்தை தொடங்கி இதுவரை 35 ஆயிரம் நூல்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன.

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் சுவடிகள் துறை என்று தனியாக உள்ளது. இங்கு 8 லட்சம் பக்கங்களை கொண்ட 4 லட்சம் சுவடிகள் உள்ளன. இவற்றை மின்னாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது 5 லட்சம் பக்கங்கள் வரை மின்னாக்கம் செய்யப்பட்டுள்ளன. இதற்காக அரசு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்திருந்தது. இன்னும் 3 லட்சம் பக்கங்களை கொண்ட சுவடிகள் மின்னாக்கம் செய்யப்பட வேண்டி உள்ளது. இதே போல 10 லட்சத்துக்கும் மேல் ஆவணசுரணை (நீளமான ஓலைச்சுவடிகளை போன்றது) உள்ளன. மோடி ஆவணங்களை மின்னாக்கம் செய்ய மராட்டிய அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதனை நூல்களாக வெளியிடப்படும்.

தமிழகத்தில் வெளியிடும் நூல்கள் சென்னை கன்னிமாராநூலகம் மற்றும் மும்பை, கொல்கத்தாவில் உள்ள நூலகங்களுக்கு அனுப்பி பதிவு செய்யப்படும். அதன் பின்னர் அந்த நூல்கள் அங்கீகரிக்கப்படும். ஆனால் மும்பை, கொல்கத்தாவுக்கு அனுப்பப்படும் நூல்கள் முறையாக பாதுகாக்கப்படவில்லை. எனவே தமிழகத்தில் வெளியிடும் நூல்களை மற்ற 3 நூலகங்களுக்கு அனுப்புவதைப்போல தமிழ்ப்பல்கலைக்கழக நூலகத்துக்கும் அனுப்பும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவர வேண்டும். தமிழ்ப்பல்கலைக்கழக நூலகத்தை டிஜிட்டல் நூலகமாக மாற்ற ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்ய ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. பேச்சு

பின்னர் குழு தலைவர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. பேசுகையில், “தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் உள்ள 1, லட்சத்து 75 ஆயிரம் நூல்களையும் மின்னாக்கம் செய்ய தேவையான நிதியை ஒதுக்க அரசிடம் பரிந்துரை செய்யப்படும். அரிய நூல்கள் வாங்கவும், கூடுதல் கட்டிடம் கட்டித்தரவும் உரிய நிதி ஒதுக்கீடு செய்ய சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பேசி, முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் வெளியிடப்படும் நூல்களின் ஒரு பிரதியை தமிழ்ப்பல்கலைக்கழகத்துக்கும் அனுப்புவதற்கு உரிய சட்டத்திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்ப்பல்கலைக்கழக நூலகம் உலக அளவில் சிறந்து விளங்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்”என்றார். 

Related Tags :
Next Story