சிதம்பரம் அருகே 2 டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட முயன்ற கிராம மக்கள்


சிதம்பரம் அருகே 2 டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட முயன்ற கிராம மக்கள்
x
தினத்தந்தி 3 Aug 2017 3:45 AM IST (Updated: 3 Aug 2017 2:09 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அருகே 2 டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி கிராம மக்கள் முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம்,

சிதம்பரம் அருகே உள்ளது வேளக்குடி கிராமம். இந்த கிராமத்தில் ரெயில்வே கேட் அருகே ஏற்கனவே டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த கடைக்கு அருகிலேயே கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக மற்றொரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த 2 டாஸ்மாக் கடைகளையும் மூடக்கோரி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், உயர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று காலையில் வேளக்குடி, பெராம்பட்டு, திட்டூர், காட்டூர், ஜெயங்கொண்டபட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் அந்த 2 டாஸ்மாக் கடைகளையும் முற்றுகையிடுவதற்காக ரெயில்வே கேட் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் கடையை முற்றுகையிடுவதற்காக அங்கிருந்து சென்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட முயன்றவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த பகுதியில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு வேளக்குடி, பெராம்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான குடிபிரியர்கள் வந்து மதுஅருந்துகின்றனர்.

அவ்வாறு மது அருந்துபவர்கள் போதை தலைக்கேறியதும் தகராறில் ஈடுபடுவதோடு அவ்வழியாக செல்லும் பெண்களை கிண்டல் செய்வதால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. இந்த நிலையில் இங்கு மற்றொரு டாஸ்மாக் கடையும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் பிரச்சினை ஏற்படும் நிலை உள்ளது. எனவே இந்த 2 டாஸ்மாக் கடைகளையும் மூடவேண்டும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

பின்னர் போலீசார், இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் மனு கொடுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது நீங்கள் கலைந்து செல்லுங்கள் என்று தெரிவித்தனர். ஏற்கனவே நாங்கள் இந்த 2 டாஸ்மாக் கடைகளையும் மூடக்கோரி உயர் அதிகாரிகளை பலமுறை வற்புறுத்தியும், மனு கொடுத்தும் உள்ளோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இந்த டாஸ்மாக் கடைகளை மூடும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் எனக்கூறினர். இதனால் போலீசாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் தற்போது புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனே மூடுவதாகவும், ஏற்கனவே இயங்கி வந்த கடையை ஒருவாரத்திற்குள் மூட நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதையடுத்து புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story