ஏரியில் அதிக ஆழத்தில் மண் எடுத்ததால் மரங்கள் வேரோடு சாய்ந்தன
ஓமலூர் அருகே ஏரியில் அதிக ஆழத்தில் மண் எடுத்ததால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதையடுத்து அந்த ஏரியில் மண் அள்ளும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
ஓமலூர்,
ஓமலூரை அடுத்த பாகல்பட்டியில் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான சுமார் 6 ஏக்கர் பரப்பளவு கொண்ட புதுகுட்டை ஏரி உள்ளது. இந்த ஏரியில் 50 ஆண்டு பழமையான பனை மரங்கள் மற்றும் விலை உயர்ந்த மரங்கள் உள்ளன. மேலும் இந்த ஏரியில் மயில்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம் இருந்ததால் மயில்கள் ஏராளமானவை இருந்தன.
இந்த நிலையில் தமிழக அரசு, விவசாயிகள் தங்களுக்கு தேவையான களிமண் மற்றும் வண்டல் மண், மொரம்பு மண்ணை எடுத்துக் கொள்ள அனுமதியளித்தது. இதனையடுத்து புதுகுட்டை ஏரியிலும் மண் அள்ளினார்கள். ஆனால் அந்த ஏரியில் அரசு நிர்ணயித்த அளவை விட அதிக ஆழத்திற்கு மொரம்பு மண் வெட்டி எடுக்கப்பட்டது. இதனால் பழமையான மரங்களின் அடிப்பகுதி பாதிக்கப்பட்டது.
இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
மொரம்பு மண் விவசாயிகளுக்கு எடுக்காமல் தனியார் நிலத்திற்கு எடுத்து செல்வதாகவும். இதனால் பழமையான மரங்கள் வேரோடு சாய்கிறது, இங்கு வசித்து வந்த மயில்கள் இடம் பெயர்கிறது எனவும் புகார் தெரிவித்தனர்.
இந்தநிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் தண்ணீர் ஏரிக்கு சென்றது. இதனால் 10–க்கும் மேற்பட்ட பனை மரங்கள் மற்றும் விலை உயர்ந்த மரங்கள் சாய்ந்து விட்டன.
இதனையடுத்து நேற்று சம்பவ இடத்திற்கு கருப்பூர் வருவாய் ஆய்வாளர் கலா மற்றும் அலுவலர்கள் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அரசு நிர்ணயித்த அளவை விட அதிகளவு ஆழத்தில் மண் வெட்டி எடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து ஏரியில் மண் எடுக்க வந்த பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர்களை அவர்கள் திருப்பி அனுப்பினர். ஏரியில் இருந்து மண் எடுத்துக் கொண்டு வாகனங்கள் ரோட்டுக்கு வரும் வழித்தடத்தில் மண்ணை கொட்டி வழியினை அடைத்தனர். இதனால் மண் எடுக்கும் பணி நிறுத்தப்பட்டது.