உப்புத் தண்ணீர் மூலம் பூமியைக் குளிர்விக்கும் தொழில்நுட்பம்!


உப்புத் தண்ணீர் மூலம் பூமியைக் குளிர்விக்கும் தொழில்நுட்பம்!
x
தினத்தந்தி 3 Aug 2017 9:00 PM IST (Updated: 3 Aug 2017 3:32 PM IST)
t-max-icont-min-icon

கடந்த 1760-ம் ஆண்டு தொடங்கி 1820 அல்லது 1840-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ‘தொழிற்புரட்சி’ ஏற்பட்டு தொழில்கள் மற்றும் பொருட்களின் உற்பத்தித் திறன் ஆகியவை பலமடங்கு உயர்ந்தது.

அதன் பிறகான காலகட்டத்தில் ஏற்பட்ட விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியானது இயற்கையை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதை மனிதன் பெரிதாக கண்டுகொள்ளவுமில்லை, பின்விளைவுகள் குறித்து அலட்டிக்கொள்ளவும் இல்லை.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மனித வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக சுற்றுச்சூழலில் உள்ள ‘பச்சை வீட்டு வாயுக்கள்’
(Greenhouse gases)
எனப்படும் கரியமில வாயு, கார்பன் மோனாக்சைடு ஆகிய வாயுக்களின் அளவு கோடிக்கணக்கான டன் அளவுகளில் அதிகமாகிவிட்டது.
அதன் விளைவாகவே தற்போது, ‘புவி வெப்பமாதல்’ எனும் ஆபத்தில் சிக்கிக்கொண்டு தவிக்கிறது மனித இனம்!

‘உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தானே ஆக வேண்டும்’ என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல, மனிதன் எந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் புவி வெப்பமாதலை ஏற்படுத்தினானோ அதே தொழில்நுட்பத்தின் உதவியுடன் அதனை சரிசெய்ய முயன்று வருகிறான்.

ஜியோ என்ஜினீயரிங் அல்லது பருவநிலை பொறியியல் (Geo Engineering / Climate Engineering) துறைசார் தொழில்நுட்பங்களின் உதவியுடன் ‘உப்புத் தண்ணீரை’ கடல்பகுதியின் மேற்பரப்பில் உள்ள மேகங்கள் மீது தெளிப்பதன் மூலமாக பூமியை குளிர்விக்கும் ஒரு புதிய திட்டத்தை, அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் விரைவில் செயல்படுத்த இருக்கிறார்கள்.
அதெல்லாம் சரி, மேகங்கள் மீது உப்புத் தண்ணீரைத் தெளித்து பூமியை எப்படி குளிர்விக்க முடியும்? என்று குழப்பமாக இருக்கிறதுதானே? உண்மைதான். புவிவெப்பமாதலை சரிசெய்ய பரிசீலனையில் உள்ள தொழில்நுட்பங்களில் ‘கடற்பரப்பு மேக பிரகாசமாக்குதல்’
(marine cloud brightening)
என்பதும் ஒன்று.

அதாவது, உப்புத்தண்ணீரை கடற்பரப்பு மேகங்கள் மீது தெளிப்பதன் மூலம் அந்த மேகங்களை சோலார் கதிரியக்கத்தை பிரதிபலிக்கச் செய்ய வைக்க முடியும். அதன்மூலமாக, பூமிக்கு உள்ளே நுழையக்கூடிய புற ஊதா கதிர்கள் உள்ளிட்ட ஆபத்தான சூரியக் கதிர்களை விண்வெளி பக்கமாக திருப்பிவிட முடியும் என்று கூறப்படுகிறது.

அதேசமயம், இந்த கடற்பரப்பு மேக பிரகாசமாக்குதல் ஆய்வானது மேகங்கள் மற்றும் தூசிப்படலம் அல்லது வளிமக் கரைசல் (aerosol) ஆகியவை தொடர்பான அறிவியல் கேள்விகளுக்கான விடையைக் கண்டறியவும் உதவும் என்கிறார் ஆய்வின் தலைமை ஆய்வாளரான பேராசிரியர் ராப் உட்.
பருவநிலை அறிவியல் துறையில் இதுவரை விடை தெரியாமலிருக்கும், ‘வளிமக் கரைசல் துகள்களால் எப்படி பூமியைக் குளிர்விக்க முடியும்?’ எனும் கேள்விக்கான விடையைக் கண்டறிவதும் இந்த ஆய்வின் முக்கியமான நோக்கமாகக் கூறப்படுகிறது. மேகங்கள் சூரிய ஒளியை எந்தெந்த வகையில் பிரதிபலிக்கும் என்பது இதுவரை ஒரு புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

உதாரணமாக, தண்ணீர் துளிகளானது காற்றில் கலக்கக்கூடிய புகை, உப்பு அல்லது இதர மனித மாசுபாட்டுப் பொருட்கள் மீது குளிர்வதன் மூலம் மட்டுமே உற்பத்தியாகும். மேலும், காற்றில் அதிகப்படியான துகள்கள் கலக்கும்போது காற்றின் ஈரப்பதமானது வெண்மையான, பிரகாசமான மற்றும் அதீத பிரதிபலிப்புத் திறன்கொண்ட மேகங்களை உருவாக்கக்கூடிய சிறு நீர்த் துளிகளை உற்பத்தி செய்யும் என்று கூறப்படுகிறது.

தற்போது, அரசு மற்றும் தனியார் நிதி உதவிக்காக காத்திருக்கும் இந்த புதிய ஆய்வுத் திட்டமானது மேகங்கள் மற்றும் மேகங்களுக்கும் வளிமக் கரைசலுக்கும் இடையிலான தொடர்பு ஆகியவை பற்றிய பல அறிவியல் உண்மைகளை வெளிக்கொண்டு வரும் என்கிறார் பேராசிரியர் ராப் உட்.
முக்கியமாக, பல வருட ஆய்வுகள் மூலம் உருவாக்கப்பட்ட, உப்புத் தண்ணீரை மிகச்சிறிய துகள்களாக மாற்றி மேகங்கள் மீது தெளிக்கும் திறன்கொண்ட நுண்துளைக் குழல் மூலம், பூமியைக் குளிர்விக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்க முயன்று வருகிறது மூன்று வருட திட்டம் கொண்ட இந்த அமெரிக்க ஆய்வு.

Next Story