ஏழைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் அரசு ஆட்சியில் உள்ளது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு


ஏழைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் அரசு ஆட்சியில் உள்ளது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு
x
தினத்தந்தி 4 Aug 2017 4:30 AM IST (Updated: 3 Aug 2017 11:10 PM IST)
t-max-icont-min-icon

ஏழைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் அரசு ஆட்சியில் உள்ளது என்று தீரன் சின்னமலை விழாவில் பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு,


ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு தலைமை தாங்கி, தீரன் சின்னமலை உருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

வீரத்திருமகன் தீரன் சின்னமலையின் ஆடிப்பெருக்கு விழாவை எம்.ஜி.ஆர். வழியில் ஆட்சி நடத்திய முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த 1996–ம் ஆண்டு சென்னையில் தீரன் சின்னமலை சிலை அமைக்க இடம் தந்ததுடன், சிலைக்காக ரூ.1 லட்சம் பணத்தையும் கொடுத்தார். மனித நேயம் மிக்க தலைவியாக திகழ்ந்தார். இங்கு வீரத்திருமகன் தீரன் சின்னமலைக்கு மணிமண்டபம் அமைத்தார். அவர் வழியில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்திக்கடவு–அவினாசி திட்ட ஆய்வுக்காக முன்னாள் முதல்–அமைச்சர் ரூ.3 கோடியே 54 லட்சம் வழங்கினார். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.250 கோடியை முதல் கட்டமாக ஒதுக்கி உள்ளார். வரும் 3 ஆண்டுகளில் இந்த திட்டத்துக்காக ரூ.1,516 கோடி ஒதுக்கப்படும் என்று மதுரையில் நடந்த கூட்டத்தில் கூறி உள்ளார்.


தமிழகத்தில் குடிமராமத்து பணிகள், நீரா உற்பத்தி என்று விவசாயிகளுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஈரோடு மாநகராட்சி மக்களுக்காக ரூ.550 கோடியில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம், திண்டல் வரை மேம்பாலத்தை நீட்டிக்க ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக முதல்–அமைச்சர் சட்டசபையில் அறிவித்து உள்ளார். ரூ.130 கோடியில் 1100 வீடுகள் கட்டப்பட உள்ளன. அந்தியூர் வேதபாளை அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் ஈரோடு மாவட்டத்துக்கு ரூ.1,244 கோடியே 96 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது உங்கள் அரசு, உங்களுக்கு பணி செய்யும் அரசு. சிலர் இந்த அரசு நிலைக்குமா? என்று கேட்டார்கள். சட்டமன்ற கூட்டம் முடிந்த பிறகும் ஏதேனும் குழப்பங்கள் விளைவிக்க முடியுமா? என்று பார்க்கிறார்கள். அவர்களுக்கு நான் கூறுவது ஒன்றே ஒன்றுதான். இந்த அரசு 4 ஆண்டுகள் மட்டுமல்ல 400 ஆண்டுகள் நிலைக்கும். ஏழைகளின் அரசு ஆட்சியில் உள்ளது. ஏழைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் அரசாக இது உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.


Related Tags :
Next Story