கயத்தாறு அருகே நின்ற வேன் மீது லாரி மோதியதில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி
கயத்தாறு அருகே நின்ற வேன் மீது லாரி மோதியதில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியானார்கள். டிரைவர் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கயத்தாறு,
கயத்தாறு அருகே நின்ற வேன் மீது லாரி மோதியதில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியானார்கள். டிரைவர் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:–
ஆன்மிக சுற்றுலாமேற்கு வங்காளம், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆன்மிக சுற்றுலாவாக மதுரைக்கு நேற்று முன்தினம் ரெயிலில் வந்தனர். பின்னர் அவர்கள் இரவில் ஒரு வாடகை வேனில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். மதுரையை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராம்குமார் (வயது 32) அந்த வேனை ஓட்டி வந்தார்.
நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தளவாய்புரம் ஆசூர் விலக்கு அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது வேனின் டயர் திடீரென்று பஞ்சரானது. இதனையடுத்து நாற்கர சாலையோரமாக டிரைவர் வேனை நிறுத்தி விட்டு மாற்று டயர் பொருத்துவதற்கு ஏற்பாடு செய்து கொண்டு இருந்தார். அதிகாலை நேரம் என்பதால் வேனில் இருந்த அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர்.
லாரி மோதியதுஅப்போது அந்த வழியாக மதுரை திருமங்கலத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு காய்கறி லோடு ஏற்றிய லாரி வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த வேனின் பின்பகுதியில் லாரி பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வேன் சில அடி தூரத்தில் கவிழ்ந்து அப்பளம் போல் நொறுங்கி கிடந்தது. வேனின் மேற்கூரை தனியாக கழன்று அந்த பகுதியில் கிடந்தது.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில், வேனில் தூங்கி கொண்டிருந்தவர்கள் பலத்த காயம் அடைந்தனர். குற்றுயிரும், குலை உயிருமாக கிடந்த அவர்கள் அபயக்குரல் எழுப்பினர்.
2 பெண்கள் பலிஇந்த விபத்தில் வேனில் இருந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த சுரேஷ்பாய் மனைவி கன்சாபென்(48), மன்சூர்பாய் மனைவி கன்சன்பாய்(47) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
வேனில் இருந்த மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த கீர்த்தி ஆச்சார்யா(72), லட்சுமிமால் மகன் நிதிஷ்(23), மன்சூர்பாய்(48), சுரேஷ்பாய்(50), குஜராத் மாநிலத்தை சேர்ந்த நரேந்திரன்(42), திபில் பாண்டிலால் மகன் நிலேஷ் பாண்டிலால்(23), கீர்த்தி(43), அனில்குமார் மகன் சுவாப் பிரதீப்(21) மற்றும் லாரியை ஓட்டி வந்த மதுரை திருமங்கலம் கீழ்கோட்டையை சேர்ந்த சங்கர் கணேஷ்(32), கிளீனர் ஆகிய 10 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அந்த வழியாக சென்றவர்கள் விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து கயத்தாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் ஒருவர் சாவுதகவல் அறிந்த போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் ஆதம் அலி, முத்துகிருஷ்ணன், ஆரோக்கிய பெலிக்ஸ்(பயிற்சி) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீர்த்தி ஆச்சார்யா பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்ற 9 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நின்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.