நாய்கள் கடித்து 3 புள்ளி மான்கள் சாவு தண்ணீர் தேடி ஊருக்குள் வந்ததால் பரிதாபம்


நாய்கள் கடித்து 3 புள்ளி மான்கள் சாவு தண்ணீர் தேடி ஊருக்குள் வந்ததால் பரிதாபம்
x
தினத்தந்தி 4 Aug 2017 4:15 AM IST (Updated: 4 Aug 2017 12:40 AM IST)
t-max-icont-min-icon

மங்களமேடு அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த 3 புள்ளி மான்களை நாய்கள் கடித்ததில் பரிதாபமாக இறந்தன.

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே வடக்கலூர் ஊராட்சி கத்தாழை மேடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் மட்டுமே குடிநீர் கிடைக்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் தண்ணீர் கிடைக்காமல் வனவிலங்குகளும் பல சமயங்களில் ஊருக்குள் வந்து தண்ணீர் குடித்து விட்டு செல்கின்றன.

இந்நிலையில் நேற்று அதிகாலை 2 புள்ளி மான்கள் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்தன. இந்த புள்ளி மான்களை பார்த்த நாய்கள் மான்களை துரத்தி துரத்தி கடித்தன. இதில் படுகாயமடைந்த புள்ளி மான்கள் அங்கேயே பரிதாபமாக இறந்தன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனசரக அலுவலர் மோகன், வனவர் காசி, வனகாப்பாளர் ஆனையப்பர் ஆகியோர் இறந்து கிடந்த 2 புள்ளி மான்களை கைப்பற்றினர். பின்னர் கால்நடை மருத்துவர் கல்பனா, புள்ளி மான்களை பிரேத பரிசோதனை செய்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். இதேபோல் அத்தியூர் கிராமத்தில் நாய்கள் துரத்தியதில் 1 புள்ளி மான் இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து புள்ளி மான் உடலை மீட்டனர். பின்னர் கால்நடை மருத்துவர் செல்வகுமார், புள்ளி மானை பிரேத பரிசோதனை செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து இறந்த 3 புள்ளி மான்களையும் வனத்துறையினர் வனப்பகுதியில் புதைத்தனர். 

Related Tags :
Next Story