காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்தது


காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்தது
x
தினத்தந்தி 4 Aug 2017 4:00 AM IST (Updated: 4 Aug 2017 12:52 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை, மாயனூரில் காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது.

குளித்தலை,

ஆடி 18-ந் தேதி புண்ணிய நதிகளில் ஒன்றான காவிரி ஆற்றங்கரை பகுதியில் ஆடிப்பெருக்குவிழா காலம் காலமாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதுபோல் கரூர் மாவட்டத்தில் காசிக்கு நிகராக போற்றப்படும் குளித்தலை கடம்பவனேசுவரர் கோவில் எதிரே உள்ள குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றங்கரையில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இங்கு குளித்தலை மற்றும் குளித்தலையை சுற்றியுள்ள பல்வேறு ஊர்களை சேர்ந்த பெண்கள் மற்றும் புதுமண தம்பதிகள் அதிகாலையிலேயே தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்து ஆற்றில் புனித நீராடி பூஜை செய்து வழிபடுவார்கள்.

வருகை குறைவு

இந்த நிலையில் அகண்ட காவிரியாக செல்லும் குளித்தலை பகுதியில் ஆற்றில் தண்ணீர் இல்லாததால் தற்போது வறண்ட காவிரியாக காட்சியளிக்கிறது. காவிரியில் தண்ணீர் இல்லாத காரணத்தால் ஆடிப்பெருக்கு விழாவான நேற்று காலை கடம்பந்துறை காவிரி கரைக்கு பெண்கள் மற்றும் புதுமணத்தம்பதிகளின் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது. இருப்பினும் இங்கு வந்த பெண்கள் தண்ணீர் இல்லாத காரணத்தால் காவிரி கரையில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்க தொட்டியில் வரும் தண்ணீரை பிடித்து பூஜை செய்ய பயன்படுத்தினார்கள். சிலர் இந்த தொட்டியில் வரும் தண்ணீரில் குளித்து பூஜையில் கலந்துகொண்டனர்.

பூஜை

பெண்கள் குழுவாக பிரிந்து கரையோரங்களில் தண்ணீர் தெளித்து மணலால் பிள்ளையார் பிடித்து மஞ்சள் குங்குமம் பூசினார்கள். பின்னர் வாழை இலை போட்டு அதில் காப்பரிசி, வெற்றிலை பாக்கு, தேங்காய், வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, நாவல்பழம், திராட்சை போன்ற பழவகைகள், பூக்கள், காதோலை கருகமணி, மஞ்சள் கயிறு போன்றவற்றை வைத்து தேங்காய் உடைத்து சூடமேற்றி பூஜை செய்தனர். பின்னர் பெண்கள் தங்களுக்குள் மஞ்சள் கயிறு மாற்றிக்கொண்டனர். ஆண்களுக்கு கைகளில் கயிறு கட்டிவிட்டார்கள்.

ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால் குளித்தலை பகுதியில் வசிக்கும் பலர் காவிரி ஆற்றங்கரைக்கு வராமல் தங்கள் வீடுகளில் உள்ள கிணறு, தண்ணீர் குழாய்கள் இருக்கும் இடங்களில் வாழை இலைபோட்டு பல்வேறு பொருட்கள் வைத்து பூஜை செய்து வழிபட்டு கயிறு மாற்றிக்கொண்டனர்.

பள்ளம்

குளித்தலை கடம்பந்துறைக்கு நேற்று வந்த பெண்கள் கூறியதாவது:-

காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கு அன்று தண்ணீர் செல்லாமல் இருந்ததே இல்லை. முதன்முறையாக இந்த ஆண்டு குளித்தலை பகுதியில் ஆற்றில் தண்ணீர் இல்லை. ஆற்றங்கரையில் இருந்து சிறிது தொலைவில் ஆற்றில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் பறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பள்ளத்தில் உள்ள தண்ணீரும் சேரும் சகதியுமாக உள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லவேண்டிய இன்று (நேற்று) மிகக்குறைந்த அளவிலான மக்களே வந்துள்ளனர். கடம்பந்துறைக்கு அதிக அளவில் பொதுமக்கள் சாமிகும்பிட வருவார்கள் என்று தெரிந்தும், பொதுமக்களுக்கு தேவையான தண்ணீர் வசதி செய்துதர இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளோ, கடம்பவனேசுவரர் கோவில் நிர்வாகமோ எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

வருந்தத்தக்கதாக உள்ளது

பொதுமக்கள் தேவைக்காக ஆற்றில் ஆழ்குழாய் அமைத்து மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் வசதி செய்து கொடுத்திருக்கவேண்டும். மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் பொதுமக்கள் குளிக்கின்றனர். அப்படி வரும் தண்ணீர் செல்ல போதுமான வழியில்லாததால் இங்குள்ள படித்துறை பகுதியில் தேங்கிக்கிடக்கிறது. இதையும் அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்காமல் கடம்பவனேசுவரர் கோவில் நிர்வாகம் இருப்பது வருந்தத்தக்கதாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாயனூர்

இதேபோல் மாயனூர் காவிரியில் எப்போதும் ஆடிப்பெருக்கு விழா அன்று காலை முதலே கூட்டம் அலைமோதும். ஆனால் இந்த ஆண்டு தண்ணீர் இல்லாத காரணத்தால் நேற்று குறைந்த அளவு கூட்டமே காணப்பட்டது. அடுத்த ஆண்டிலாவது காவிரி தாய் பொங்கி வர வேண்டும் என்ற வேண்டுதலோடு மாயனூர் காவிரியில் பெண்கள் மற்றும் புதுமண தம்பதிகள் தலை வாழை இலைபோட்டு காவிரி தாய்க்கு படையலிட்டு அதில் தேங்காய், வாழைப்பழம், பச்சரிசி, நாவல்பழம், பேரிக்கா, கொய்யா, ஆப்பிள் மற்றும் மாங்கல்யத்தை வைத்து வழிபட்டனர். பெண்கள் புதிதாக மஞ்சள் கயிறு மாற்றிக்கொண்டனர். காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் ஆடிப்பெருக்கு விழா நேற்று களையிழந்து காணப்பட்டது.


Related Tags :
Next Story