நாடகமாடிய இளம்பெண்: கொள்ளையர்களை விரட்டிச்சென்ற பஸ் டிரைவரிடம் ‘ஸ்கூட்டர்’ பறிப்பு
இளம்பெண் நாடகமாடியதை நம்பிய பஸ் டிரைவர், அந்த கொள்ளையர்களை ‘ஸ்கூட்டரில்’ விரட்டிச்சென்றார். அப்போது அவர்கள் கத்தியைக்காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ‘ஸ்கூட்டரை’ பறித்துச்சென்றனர்.
சென்னை,
சென்னை கொசப்பேட்டையைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 30). இவர் சென்னை மாநகர பஸ் போக்குவரத்து கழக டிரைவர். இவர் நேற்று அதிகாலை 5 மணியளவில் தனது ‘ஸ்கூட்டரில்’ வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தார்.
ஈ.வி.கே.சம்பத் சாலை-ஈ.வெ.ரா. சாலை சிக்னல் அருகே திரும்பியபோது, இளம்பெண் ஒருவர் தனது தங்கச்சங்கிலியை கொள்ளையர்கள் 2 பேர் பறித்து சென்றதாக கூச்சல் போட்டபடி நின்றார். அப்போது ஈ.வெ.ரா. சாலையில் 2 நபர்கள் ஓடிக்கொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி அவர்களை ‘ஸ்கூட்டரில்’ விரட்டிச்சென்றார்.
‘ஸ்கூட்டர்’ பறிப்பு
ரித்தர்டன் சாலை சந்திப்பு சிக்னல் அருகே கொள்ளையர்கள் 2 பேரையும் கிருஷ்ணமூர்த்தி மடக்கிப் பிடித்தார். அப்போது திடீரென, அதில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கிருஷ்ணமூர்த்தியை குத்த முயன்றார். இதனால் பயந்துபோன அவர் ‘ஸ்கூட்டரை’ போட்டுவிட்டு விலகி நின்றார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கொள்ளையர்கள் 2 பேரும், கிருஷ்ணமூர்த்தியின் ‘ஸ்கூட்டரை’ எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி திரும்பி வந்து பார்த்தபோது சங்கிலி பறிக்கப்பட்டதாக கூச்சல் போட்ட இளம்பெண்ணையும் காணவில்லை. அதன்பிறகுதான் கிருஷ்ணமூர்த்திக்கு உண்மை தெரியவந்தது.
நாடகம்
தங்க சங்கிலி பறிக்கப்பட்டதாக இளம்பெண் நாடகமாடியதும், அவருடைய கூட்டாளிகள் 2 பேர்தான் ‘ஸ்கூட்டரை’ பறித்துச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து கிருஷ்ணமூர்த்தி வேப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாடகமாடிய இளம்பெண்ணையும், ஸ்கூட்டரை பறித்துச் சென்ற கொள்ளையர்களையும் தேடி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் இந்த சம்பவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர். உதவ சென்றவருக்கு இந்த பரிதாபம் நேர்ந்துள்ளது.
Related Tags :
Next Story