சென்னை ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி
சென்னை ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவி உயிரிழந்தாள்.
சென்னை,
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள நீப்பத்துறை கிராமம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் தனஞ்செழியன். இவருடைய மகள் சுஜாதா (வயது 10). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.
இந்த நிலையில் சுஜாதாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலன் இன்றி சுஜாதா இறந்தாள்.
சிறுமி உயிரிழப்பு குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
3 போலீசார் அனுமதி
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாணவி சுஜாதாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அந்த காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டாள்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 46 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு லோகேஷ்வரராவ்(36), பிரதான்(28) என்ற 2 மத்திய ரிசர்வ் போலீசாரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த அருள்மணி என்ற ஒரு பட்டாலியன் பெண் போலீசும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் ஆறுதல்
இதற்கிடையே சிகிச்சை பெற்று வந்த சிபு, பார்த்திபன், சக்திவேல், யோகராஜ் ஆகிய 4 போலீசார் குணமாகி நேற்று வீடு திரும்பினர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story