தொழில் அதிபருடன் ரூ.1 கோடி நில பேரம் சாலை மேம்பாட்டு கழக அதிகாரி இடைநீக்கம்


தொழில் அதிபருடன் ரூ.1 கோடி நில பேரம் சாலை மேம்பாட்டு கழக அதிகாரி இடைநீக்கம்
x
தினத்தந்தி 4 Aug 2017 4:00 AM IST (Updated: 4 Aug 2017 2:44 AM IST)
t-max-icont-min-icon

சாலை மேம்பாட்டு கழக அதிகாரி ராதேஷ்யாம் மோபால்வரை பணி இடைநீக்கம் செய்து முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்.

மும்பை,

தொழில் அதிபருடன் ரூ.1 கோடி நில பேரம் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில், சாலை மேம்பாட்டு கழக அதிகாரி ராதேஷ்யாம் மோபால்வரை பணி இடைநீக்கம் செய்து முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்.

ராதேஷ்யாம் மோபால்வர்

மாநில சாலை மேம்பாட்டு கழக துணை தலைவரும், மேலாண்மை இயக்குனருமான ராதேஷ்யாம் மோபால்வர், மும்பை போரிவிலியில் உள்ள 15 ஆயிரம் சதுரஅடி நிலத்துக்கு தொழில் அதிபர் ஒருவருடன் ரூ.1 கோடி வரை பேரம் பேசியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பான ஆடியோ ஆதாரம் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. பரபரப்பான இந்த சூழலில், நேற்று சட்டசபை கூடியதும் இந்த பிரச்சினையை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர்.

அஜித்பவார் கேள்வி

தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் அஜித்பவார் பேசும்போது, ராதேஷ்யாம் மோபால்வர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு முதல்–மந்திரி அலுவலகத்துக்கு பிரதமர் அலுவலகம் பல முறை கடிதம் எழுதியதாக குறிப்பிட்டார். மேலும், ‘‘முறைகேடு புகாரில் சிக்கிய ஏக்நாத் கட்சே பதவி நீக்கம் செய்யப்பட்ட போது, மந்திரி பிரகாஷ் மேத்தாவும், ராதேஷ்யாம் மோபால்வரும் ஏன் பதவிநீக்கம் செய்யப்பட கூடாது?’’ என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

வீட்டுவசதி துறை மந்திரியான பிரகாஷ் மேத்தா, ஒரு திட்டத்துக்கான மேம்பாட்டு உரிமைகளை முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசின் ஆலோசனை இன்றி பரிமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு பதில் அளித்த நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார், ‘‘ஊழல் கறைபடிந்த யாருக்கும் நாங்கள் ஆதரவு தெரிவிக்க மாட்டோம்’’ என்றார்.

இடைநீக்கம்

இதைத்தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதில் அளித்து பேசினார். அவர் கூறுகையில், ‘‘ராதேஷ்யாம் மோபால்வருக்கு எதிராக நேரடி ஆதாரங்கள் ஏதுமில்லை. எதிர்க்கட்சிகளின் தொடர் கோரிக்கை காரணமாக, விசாரணை முடிவடையும் வரையில், அவர் சாலை மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார். அவர் மீதான விசாரணை ஒரு மாதத்துக்குள் முடிவடையும்’’ என்றார்.

விதிமீறல்

அதேசமயம், மந்திரி பிரகாஷ் மீதான குற்றச்சாட்டுக்கு முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் வலியுறுத்தினார். அத்துடன், பிரகாஷ் மேத்தா விதிமீறலில் ஈடுபட்டதாகவும், மேம்பாட்டு உரிமைகளை தனது ஆலோசனை இன்றி பரிமாற்றம் செய்ததை முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசும் ஒப்புக்கொண்டதாக ராதாகிருஷ்ண விகே பாட்டீல் கூறினார்.

முன்னதாக, மந்திரி பிரகாஷ் மேத்தா மற்றும் ராதேஷ்யாம் மோபால்வர் ஆகியோரை நீக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், சட்டசபை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.


Next Story