தொழிலாளியை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
தொழிலாளியை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள், கடலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கடலூர்,
திட்டக்குடி அருகே உள்ள தர்மக்குடிகாடு பகுதியில் வேணுகோபாலசாமி கோவிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமிக்க முயற்சி செய்தனர். இதனை தட்டிக்கேட்டவர்கள் மீது ஆக்கிரமிப்பாளர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சிவக்குமார் என்ற தொழிலாளி சிகிச்சைக்காக திருச்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி செத்தார். அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்யும் வரை சிவக்குமாரின் உடலை வாங்கமாட்டோம் என்று கூறி அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அவரது உடல் திருச்சி அரசு ஆஸ்பத்திரி சவக்கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளது.
முற்றுகை
இந்த நிலையில் சிவக்குமாரின் சாவுக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது, சிவக்குமார் சாவுக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்யக்கோரியும், புகாரை வாங்க மறுத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷம் போட்டனர்.
இந்த போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பக்கிரி, நிர்வாகிகள் தலித்ராஜா, ஜெயராமன், முருகன் மற்றும் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் பொன்.பெரியசாமி, பூமிநாதன், குணா, வெங்கடேசன், விஜயரங்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story