பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியை கைது செய்யக்கோரி ஊர்வலமாக செல்ல முயன்ற 148 பேர் கைது


பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியை கைது செய்யக்கோரி ஊர்வலமாக செல்ல முயன்ற 148 பேர் கைது
x
தினத்தந்தி 4 Aug 2017 4:05 AM IST (Updated: 4 Aug 2017 4:04 AM IST)
t-max-icont-min-icon

தொழில் அதிபர் கொலை வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரியை கைது செய்ய வலியுறுத்தி கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்ற 148 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி, 

புதுவை திருபுவனையை சேர்ந்த தொழிலதிபர் வேலழகன் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் போலீஸ் சூப்பிரண்டு தெய்வசிகாமணி மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதைத்தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய தெய்வசிகாமணி மீது கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்யவேண்டும் என்று கோரி கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடத்தப்போவதாக திராவிடர் விடுதலை கழகத்தினர் அறிவித்து இருந்தனர்.

அனுமதி மறுப்பு

அதன்படி அவர்கள் நேற்று காலை அண்ணா சிலை அருகே கூடினார்கள். அங்கிருந்து ஊர்வலமாக செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால் திட்டமிட்டபடி ஊர்வலம் நடத்தியே தீருவோம் என்று திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு.அய்யப்பன் போலீசாரிடம் தெரிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் சூப்பிரண்டு வெங்கடசாமி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் செல்வம், தனசெல்வம் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதற்கிடையே திருபுவனை பகுதியில் இருந்து வேலழகனின் உறவினர்களும் அங்கு வந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

போலீசார் ஊர்வலமாக செல்ல அனுமதி மறுத்ததை தொடர்ந்து அவர்கள் அண்ணாசிலை அருகில் உள்ள ஒதியஞ்சாலை காவல்நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

148 பேர் கைது

தொடர்ந்து அவர்கள் கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இதில் திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு.அய்யப்பன், மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகநாதன், தமிழர் களம் அழகர், மனித உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் முருகானந்தம் உள்பட 148 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் சிறிது நேரம் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். 

Next Story