10.சாதி மோதலைத் தவிர்த்த விரல் ரேகை


10.சாதி மோதலைத் தவிர்த்த விரல் ரேகை
x
தினத்தந்தி 4 Aug 2017 2:00 PM IST (Updated: 4 Aug 2017 12:10 PM IST)
t-max-icont-min-icon

சாயல்குடி- அருப்புக்கோட்டை நெடுஞ்சாலையில் பெருநாழி காவல்நிலையம் உள்ளது. அந்த காவல்நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்குப் பாத்தியப்பட்ட புராதனக் கோவில் ஒன்று இருக்கிறது.

தென் மாவட்டங்களில் நிகழும் சிறுசிறு பிரச்சினைகள் குறித்து உரிய நேரத்தில், சரியான முறையில் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், காலப்போக்கில் அவை சாதி மோதல்களாக உருவெடுத்து வன்முறையில் முடிந்துவிடும் என்பதை உணர்த்தும் சம்பவங்கள் பல கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன. அவற்றுள் ஒன்றை தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

சாயல்குடி- அருப்புக்கோட்டை நெடுஞ்சாலையில் பெருநாழி காவல்நிலையம் உள்ளது. அந்த காவல்நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்குப் பாத்தியப்பட்ட புராதனக் கோவில் ஒன்று இருக்கிறது. 1993-ம் ஆண்டு அந்தக் கோவில் திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

திருவிழா முடிந்து இரண்டு நாட்கள் கழிந்த ஒரு அதிகாலைப் பொழுதில், கோவிலைச் சுத்தம் செய்து, காலைநேர பூஜை செய்வதற்காக கோவில் பூசாரி கோவிலுக்குச் சென்றார். அங்கு கண்ட காட்சி, அவரை நிலைகுலைய வைத்தது.

கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கோவில் கருவறைக்குள் நுழைந்தார் பூசாரி. அங்கு, மூலவர் அதன் பீடத்தோடு சேர்த்து பெயர்த்தெடுக்கப்பட்டு கீழே கிடந்தார். கருவறையின் முன்புற மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவலை உடனடியாக கோவில் நிர்வாகிகளுக்கும், கிராம முக்கியஸ்தர்களுக்கும் தெரிவித்தார். தகவல் அறிந்ததும், கிராமத்தில் இருந்த ஆண்களும், பெண்களும், இளைஞர்களும் கோவில் முன்பாக குவிந்தனர். திருவிழா முடிந்த இரண்டே நாட்களில் நடந்த இந்த அசம்பாவிதம், மக்களுக்கு வேதனையை அளித்தது.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் காவல்துறையினரும், வருவாய்துறை அதிகாரிகளும் அங்கு வந்தனர். துயரத்தில் இருந்த ஊர் மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன், அசம்பாவிதச் செயலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.

நேரம் செல்லச் செல்ல, சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் மக்கள் வரத் தொடங்கினர்.

காவல்துறையின் விசாரணை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, ஊர் மக்களில் சிலர் இந்த அசம்பாவிதம் குறித்து தங்களது கருத்துகளையும், யூகங்களையும் வெளிப் படையாகக் கூறத் தொடங்கினர்.

தங்கள் சமூகத்தினர் சிறப்பாகத் திருவிழா கொண்டாடியதைப் பொறுத்துக் கொள்ள முடியாத, மாற்று சமூகத்தைச் சேர்ந்த விஷமிகள்தான் இந்தச் செயலைச் செய்துள்ளனர் என்பதாக அவர்கள் பேச்சு இருந்தது. மேலும், அந்த மாற்று சமூகத்தினர் வசித்து வரும் பகுதிக்குச் சென்று, அவர்களைத் தாக்க வேண்டும், அவர் களது குடியிருப்புகளை அடித்து நொறுக்கி சேதப் படுத்த வேண்டும், என்றும் திட்டம் தீட்டத் தொடங்கினர்.

பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் திட்டத்தை உணர்ந்த மாற்று சமூகத்தினரும், தங்கள் மீது தாக்குதல் நடந்தால், அதை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங் கினர்.

அந்த கிராமத்தில் இரு சமூகத்தினருக்கும் இடையே பதற்றநிலை உச்சகட்டத்தை எட்டியது. அதை உணர்ந்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள் சிலரை அழைத்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

24 மணி நேரத்திற்குள், இந்த கொடுஞ்செயலைச் செய்தவர்கள் யார் என்று கண்டுபிடித்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதுவரை ஊர் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தனர்.

அந்த கிராமத்தில் சாதி மோதல் உள்ளிட்ட அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்க வேண்டுமென்றால், கோவிலுக்குள் நுழைந்து இந்தக் கொடுஞ் செயலைச் செய்த குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நிலைக்கு காவல்துறையினர் தள்ளப்பட்டனர்.

உடைக்கப்பட்டிருந்த கோவில் கதவின் பூட்டு, உண்டியல் மற்றும் கோவிலில் இருந்த இதர பொருட்களின் மீது குற்றவாளிகளின் விரல் ரேகைப் பதிவுகள் ஏதேனும் உள்ளனவா? என்பதைக் கண்டறிய விரல் ரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

ஒவ்வொரு மாவட்ட காவல்துறை அலுவலகத்திலும் விரல் ரேகை நிபுணர்கள் அடங்கிய ‘விரல் ரேகைக் கூடம்’ அமைந்துள்ளது. அந்த விரல் ரேகைக் கூடத்தில், கடந்த காலங்களில் அந்த மாவட்டத்திலும், பிற மாவட்டங்களிலும் குற்றங்களில் ஈடுபட்டவர்களின் விரல் ரேகைப் பதிவுகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.

சம்பவ இடமான கோவிலின் உட்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட விரல் ரேகை நிபுணர்கள், குற்றவாளிகளின் விரல் ரேகைப் பதிவுகள் சில, அங்கிருந்த பொருட்களின் மீது இருப்பதைக் கண்டறிந்தனர். அவைகளை முறைப்படி பதிவு செய்து கொண்டனர். உடனே தங்களது அலுவலகம் சென்று, அலுவலகக் கோப்பில் உள்ள விரல் ரேகைப் பதிவுகளோடு ஒப்பிட்டுப் பார்த்ததில் கிடைத்த தகவல், அந்த கிராமத்தில் நிலவி வந்த பதற்ற நிலையைத் தணித்தது. நிகழ இருந்த சாதி மோதல் தவிர்க்கப்பட்டு, அன்று மாலையே கிராமம் அமைதி நிலைக்குத் திரும்பியது.

இரவு நேரங்களில் கிராமப்புற கோவில்களுக்குள் நுழைந்து, சாமி சிலைகளைப் பீடத்தோடு பெயர்த்து, சாய்த்து விட்டதும், கோவில் உண்டியல்களை உடைத்ததுமான பல நூறு சம்பவங்கள், 1986-ம் ஆண்டு முதல் தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் நடைபெற்று வந்தன.

இது மாதிரியான குற்றங்களைப் புரியும் கும்பல் எது? எதற்காக கோவிலில் உள்ள சிலைகளைப் பீடங்களோடு பெயர்த்து, சாய்த்து வருகின்றனர்? போன்ற கேள்விகளுக்கான பதிலைத் தேடி, காவல்துறையின் தனிப்படைகள் பல இரவும், பகலும் தென் மாவட்டங் களில் சுற்றி வந்தன.

தென் மாவட்டங்களில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெற்ற இடங்கள் அனைத்தையும் விரல் ரேகை நிபுணர்கள் சென்று பார்வையிட்டனர். குற்றவாளிகளின் விரல் ரேகைப் பதிவுகள் ஏதேனும் சம்பவ இடத்தில் உள்ளனவா? எனத் தொடர்ந்து ஆய்வு செய்து வந்தனர். அவர்களது ஆய்வின் முடிவு காவல்துறையினரைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது.

தென் மாவட்டங்களில் 1986 முதல் 1993 வரை, இது மாதிரியான முறையில் நடந்த 230-க்கும் மேற்பட்ட குற்றச் சம்பவ இடங்களில் விரல் ரேகை நிபுணர்கள் கண்டறிந்த விரல் ரேகைப் பதிவுகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று ஒத்து இருந்தன. அதாவது, அந்த 230-க்கும் மேற்பட்ட குற்றச் சம்பவங்களைச் செய்த குற்றவாளி ஒருவர்தான் என்ற கருத்தை விரல் ரேகை நிபுணர்கள் தெரிவித்தனர். ஆனால், அந்த குற்றவாளி யார்? அவனது நோக்கம் என்ன? என்ற கேள்விகளுக்கான பதில்தான் காவல்துறையினருக்குத் தெரியவில்லை.

பெருநாழி காவல்நிலையம் அருகில் உள்ள கிராமத்து கோவிலில், விரல் ரேகை நிபுணர்கள் பதிவு செய்த விரல் ரேகைகள் அனைத்தும், தொடர்ந்து தென் மாவட்டங்களில் உள்ள கோவில் களில் பல ஆண்டுகளாக குற்றம் புரிந்து வரும் குற்றவாளியின் விரல் ரேகைகளோடு ஒத்துப்போகிறது. எனவே இந்தக் கோவில் திருட்டு சம்பவமானது சாதி அடிப்படையில் நிகழ்த்தப்பட வில்லை என்பதைக் காவல்துறையினர் ஊர் மக்களுக்கு எடுத்துரைத்து, அந்த கிராமத்தில் அமைதியை ஏற்படுத்தினர்.

கிராமப்புற கோவில் களைத் தேர்வு செய்து, 8 ஆண்டுகளாக பல நூறு குற்றச் செயல் களைப் புரிந்தவனை விரைந்து கண்டுபிடிக்க வேண்டிய சவாலைக் காவல்துறை எதிர்நோக்கி இருந்தது.

இந்தச் சூழலில் 1994-ம் ஆண்டில் ஒரு இரவு நேரத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் களவு செய்து விட்டு வரும் வழியில், கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு தன்னார்வத் தொண்டரிடம் பிடிபட்டான், அந்தக் குற்றவாளி.

கோவில் சிலை களைப் பீடத்தோடு பெயர்த்துப் போட்டதற்கான காரணம் குறித்து, அவனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கோவிலில் சிலை ஒன்றைப் பிரதிஷ்டை செய்யும் பொழுது, அதன் அடியில் விலையுயர்ந்த தங்கம், வைரம் மற்றும் ஐம்பொன் பொருட்களை வைப்பது வழக்கம் என்றும், அவைகளைத் திருடு வதற்காகத்தான், அவ்வாறு செய்ததாக பிடிபட்ட குற்றவாளி விளக்கமளித்தான். அந்தக் குற்றவாளியின் பெயர் சோலையப்பன்.

8 ஆண்டுகளாக தென் மாவட்டங் களில் நூற்றுக்கணக்கான கோவில் களில் களவு செய்த சோலையப்பன் மீதான வழக்குகள் அனைத்தும், ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்திருந்த சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. ஓராண்டு காலத்திற்கு மேலாக விசாரணை செய்த சிறப்பு நீதிமன்றம், 150-க்கும் மேற்பட்ட கோவில் களவு வழக்குகளில், சோலையப்பனுக்கு சிறை தண்டனை வழங்கியது.

ஆதாயக் கொலை, திருட்டு, கொள்ளை, போலி கையெழுத்து போட்டு மோசடி செய்தல் போன்ற பல்லாயிரக்கணக்கான குற்ற வழக்கு களில், குற்றவாளி யார்? என்று துப்பு துலக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த போலீசாருக்கு, புலன் விசாரணையில் வழிகாட்டியாக இருந்து, குற்றவாளிகளை அடையாளம் காட்டிய பெருமை ‘விரல் ரேகை அறிவியல்’ நுட்பத்தையேச் சாரும்.

-விசாரணை தொடரும்.

விரல் ரேகையின் சிறப்பம்சம்

உலக அதிசயங்கள் ஏழு என்று சொல்வார்கள். ஆனால் அவைகளைக் காட்டிலும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் அதிசயம், ‘விரல் ரேகை அறிவியல்’. அதன் சிறப்பு அம்சங் களில் சிலவற்றை இங்கு காண்போம்.

*ஒரு மனிதனின் ஒரு விரலில் உள்ள ரேகையானது, அவனது மற்ற விரல் ரேகையுடனோ அல்லது உலகத்தில் வாழ்கின்ற, வாழ்ந்து மறைந்த மனிதர்களின் விரல் ரேகைகளுடனோ ஒத்து இருக்காத தனித்தன்மை வாய்ந்தது.

*தாயின் கருவில் இருக்கும் பொழுதே, ஒரு குழந்தையின் விரல் ரேகைகள் முழுமையாக வளர்ச்சி பெற்றுவிடுகின்றன. அதன்பின், அக்குழந்தை பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, இறக்கும் வரை அதன் விரல் ரேகைகளில் மாற்றம் இருக்காது.

*ஒரு மனிதன் இறந்த பின்பும், அவனது விரல் ரேகைகளில் மாற்றம் எதுவும் ஏற் படாது. அவனது விரல் தோல் அழுகிய பின்னர்தான், விரல் ரேகைகளின் தனித்தன்மை மறையும்.

*ஒரு தாய் வயிற்றில் பிறந்த இரட்டை குழந்தைகளின் விரல் ரேகைக் கூறுகள் கூட, முழுமையாக ஒன்று போல் அமைந்திருக் காது.

*ஒரு மனிதனின் விரலில் உள்ள மேல் தோல் சேதமடைந்தாலும், சில நாட்களுக்குப் பின்னர் வளர்ச்சியடைகின்ற மேல் தோலில் உள்ள ரேகையானது, முன்பு இருந்ததைப் போலவேதான் இருக்கும். விரல் ரேகைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.

*அறுவை சிகிச்சையின் மூலம் ஒரு மனிதன், தான் விரும்பியபடி, தன் விரல் ரேகைகளை மாற்றி அமைத்துக் கொள்ள முடியாது.

*பளபளப்பான ஒரு பொருளை விரல் களால் தொடும் பொழுதோ அல்லது எடுக்கும் பொழுதோ, விரல்களில் உள்ள வியர்வை துவாரங்கள் மூலம் வெளிப்படும் வியர்வை, அந்தப் பொருட்களின் மீது பதிந்து விடு கிறது. அவ்வாறு பதிந்துவிடும் ரேகைப் பதிவுகள் நம் கண்களுக்குத் தெரியாது. அந்த பொருட்களின் மீது ரசாயன பவுடரைத் தூவி, மறைந்திருக்கும் விரல் ரேகைப் பதிவுகளை விரல் ரேகை நிபுணர்கள் கண்டறிவார்கள். அதைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணமுடியும்.

*விரல் ரேகை நிபுணர்களின் சாட்சியத் தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, குற்றவாளி களுக்கு தண்டனை வழங்கும்.

விரல் ரேகை ஆய்வுப் பணிகளில் தற் பொழுது கணினிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், விரல் ரேகை நிபுணர்களின் செயல் திறனுக்கு, ஒரு போதும் கணினிகள் மாற்றாக அமைந்துவிட முடியாது.

விரல் ரேகைக் கூடம்

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு மேற்குவங்காளத்தின் மாவட்ட கலெக்டராக ‘சர் வில்லியம் ஹர்ஷல்’ என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர்தான், 1858-ம் ஆண்டு முதல் அரசுப் பணிகளில் விரல் ரேகை அறிவியலைப் பயன்படுத்தியவர் என்ற பெருமைக்குரியவர். பத்திரப்பதிவு அலுவலகங்களில் கிரயப்பத்திரம் பதிவு செய்யும் பொழுது, ஆள் மாறாட்டத்தைத் தவிர்க்க, விரல் ரேகைகள் எடுக்கும் முறையை இவர் நடைமுறைப்படுத்தினார். கைதிகளைச் சிறைச்சாலைக்குக் கொண்டு வரும்பொழுது, அவர்களுடைய விரல் ரேகைகளைப் பதிவு செய்யும் முறையையும் இவர்தான் கொண்டு வந்தார்.

அவரைத் தொடர்ந்து, 1891-ம் ஆண்டில் வங்காள மாநிலக் காவல்துறைத் தலைவராகப் பணியாற்றிய ‘சர் எட்வர்ட் ரிச்சர்டு ஹென்றி’ என்பவர், விரல் ரேகைப் பதிவுகளைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் முறையைச் செயல்படுத்தினார். இதற்காக ஆங்கிலேயே அரசின் அனுமதியுடன் 1897-ம் ஆண்டு கொல்கத்தாவில் முதன் முதலில், ‘விரல் ரேகைக் கூடம்’ அமைக்கப்பட்டது. குற்றப் புலன் விசாரணையில் போலீசாருக்குத் துணையாக இருந்து, குற்றவாளிகளை அடையாளம் காட்டும் பணியில் இந்த விரல் ரேகைக் கூடம் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது.

கொல்கத்தாவைத் தொடர்ந்து 1901-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ஸ்காட்லாண்டு யார்டிலும், 1903-ம் ஆண்டு அமெரிக்காவிலும் விரல் ரேகைக் கூடங்கள் தொடங்கப்பட்டன. 1908-ம் ஆண்டுக்குள் பெரும்பாலான உலக நாடுகளில் விரல் ரேகைக் கூடங்கள் அமைக்கப்பட்டு, சிறப்பாக செயல்படத் தொடங்கின.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றபடி, அந்த நாட்டில் பொருள் தொடர்பான குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. பொருளாதார ரீதியான குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும், நடைபெற்ற குற்றச் செயல்களுக்குக் காரணமானவர்களை அடையாளம் கண்டறியவும் காவல் துறையினருக்குப் பெரிதும் உறுதுணையாக இருப்பது ‘விரல் ரேகை அறிவியல்’ ஆகும்.

Next Story