குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவிகளில் நேற்று தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசி,
குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவிகளில் நேற்று தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
குற்றால சீசன்நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஜூன் மாதம் சீசன் தொடங்கியது. தொடங்கிய சில நாட்களில் சீசன் களை கட்டியது. அதன் பிறகு இரண்டு முறை அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால் சில நாட்களிலேயே சாரல் மழை இல்லாமல் சீசன் சரியில்லாமல் போனது. தொடர்ந்து சாரல் மழை இல்லாமல் இருந்ததால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் குறைவாக விழுந்து வந்தது.
பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகியவற்றில் தண்ணீர் இல்லை. குறைவாக விழுந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர். குற்றால அருவிகளில் போதிய தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணிகள் மேக்கரை, கண்ணுப்புளி மெட்டு போன்ற இடங்களுக்கு சென்று தனியார் இடங்களில் உள்ள அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் பலர் கேரள மாநிலம் அச்சன்கோவில், ஆரியங்காவு பகுதிகளுக்கும் குளிப்பதற்காக சென்றனர். இதனால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்தது.
அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீர்இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குற்றாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை தூறியது. மலைப்பகுதிகளிலும் மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நேற்று காலை மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அருவிகளில் தண்ணீர் கொட்டுவதை அறிந்து தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் மட்டும் நேற்று குளித்து மகிழ்ந்தனர். இதனால் அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நேற்று குறைவாக காணப்பட்டது. கூட்டம் குறைவாக இருந்ததால் இந்த இரண்டு அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து சென்றனர்.