கூடங்குளம் 2–வது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தம்


கூடங்குளம் 2–வது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தம்
x
தினத்தந்தி 5 Aug 2017 2:00 AM IST (Updated: 5 Aug 2017 12:37 AM IST)
t-max-icont-min-icon

கூடங்குளம் 2–வது அணு உலையில் நேற்று மின்உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டது.

வள்ளியூர்,

கூடங்குளம் 2–வது அணு உலையில் நேற்று மின்உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டது.

மின் உற்பத்தி நிறுத்தம்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 3, 4–வது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகளும் நடந்து வருகிறது. இந்த நிலையில் 2–வது அணு உலையில் ஏற்பட்டிருந்த பழுது நீக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் 28–ந் தேதி முதல் மீண்டும் இயங்க தொடங்கியது. இதன் மூலம் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் நேற்று காலை 10.35 மணி அளவில் 2–வது அணு உலையில் உள்ள டர்பன் ஜெனரேட்டர் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டது.

1125 மெகாவாட் பாதிப்பு

ஏற்கனவே முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 13–ந் தேதி முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகள் 65 நாட்களில் முடிந்து மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என கூடங்குளம் அணு உலை வட்டாரம் தெரிவித்திருந்தது.

ஆனால் 65 நாட்கள் முடிந்தும் இன்னும் பராமரிப்பு பணிகள் முடியாமல், மின்உற்பத்தி காலதாமதமாகி வருகிறது. தற்போது 2 அணு உலைகளும் நிறுத்தப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய 1125 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.


Next Story