கணவருடன் ஏற்பட்ட தகராறில் மகளை கொன்று தாய் தூக்குப்போட்டு தற்கொலை


கணவருடன் ஏற்பட்ட தகராறில் மகளை கொன்று தாய் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 5 Aug 2017 4:45 AM IST (Updated: 5 Aug 2017 1:41 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மகளை கொன்றுவிட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சிறுவன் தப்பி ஓடியதால் உயிர்பிழைத்தான். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வேலூர்,

வேலூர் வசந்தபுரத்தில் உள்ள பர்மாகாலனி கே.கே.நகரை சேர்ந்தவர் குமரன் (வயது 45). இவருடைய மனைவி வாணிஸ்ரீ. இவர்களுடைய மகள் சுபஸ்ரீ (7), மகன் கிஷோர்குமார் (6). சுபஸ்ரீ 2-ம் வகுப்பும், கிஷோர்குமார் 1-ம் வகுப்பும் படித்து வந்தனர். குமரன் காட்பாடி விருதம்பட்டில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலைபார்த்து வந்தார்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அப்போது குமரன் வேலைபார்த்து வந்த டாஸ்மாக் கடையும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. இதனால் குமரன் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் தனது வீட்டின் மேல் மாடியில் ரூ.10 லட்சத்தில் அறைகள் கட்டியுள்ளார் . இதனால் அவருக்கு கடன் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மகள் சுபஸ்ரீ படிக்கவில்லை என்று வாணிஸ்ரீ திட்டி உள்ளார். இதனால் குமரனுக்கும், வாணிஸ்ரீக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் குமரன் மாடிக்கு சென்று தூங்கிவிட்டார். அடிக்கடி கணவருடன் தகராறு ஏற்படுவதால் வெறுப்படைந்த வாணிஸ்ரீ தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். மேலும் தான் தற்கொலை செய்துகொண்டால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது என்று கருதிய அவர் குழந்தைகளையும் கொலைசெய்ய திட்டமிட்டிருக்கிறார்.
அதன்படி, நள்ளிரவு 12 மணிக்குமேல் தனது மனதை கல்லாக்கிக்கொண்டு மகள் சுபஸ்ரீயை படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்துள்ளார். அடுத்து மகன் கிஷோர்குமாரை கொலை செய்ய முயன்றதாகவும், அவன் தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. உடனே வீட்டின் மற்றொரு அறையில் உள்ள மின்விசிறியில் வாணிஸ்ரீ, சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நேற்று அதிகாலையில் குமரன் எழுந்துவந்தபோது மனைவி மற்றும் மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். இதைகேட்டு பக்கத்துவீட்டை சேர்ந்தவர்களும் அங்கு வந்துள்ளனர். உடனடியாக இதுகுறித்து வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று வாணிஸ்ரீ மற்றும் சுபஸ்ரீ ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகளை கொன்று, தாய் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story