ஹெல்மெட் அணிந்து சென்றவர்களை போலீசார் இனிப்பு வழங்கி பாராட்டினர்


ஹெல்மெட் அணிந்து சென்றவர்களை போலீசார் இனிப்பு வழங்கி பாராட்டினர்
x
தினத்தந்தி 5 Aug 2017 4:30 AM IST (Updated: 5 Aug 2017 2:10 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து சென்றவர்களுக்கு, போலீசார் இனிப்பு, பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

மதுரை,

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வதால் விபத்துகளில் உயிரிழக்க நேரிடுகிறது. எனவே அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும், அவ்வாறு அணியாமல் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அறிவித்தார்.

அதன்படி நேற்று காலை மதுரை நகர் முழுவதும் போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம், ஒழுங்கு போலீசார் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்கிறார்களா என்று சோதனையில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர்கள் திருமலைக்குமார், ஜோசப்நிக்ஸன் ஆகியோர் தலைமையில் போக்குவரத்து போலீசார் 18 இடங்களில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ஹெல்மெட் அணிந்து சென்றவர்களை போலீசார் இனிப்பு வழங்கி பாராட்டினர்.

இது குறித்து உதவிகமிஷனர் திருமலைக்குமார் கூறியதாவது:- ஐகோர்ட்டு உத்தரவின்படி இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். அதை அணிந்து செல்வதால் விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளில் இருந்து தப்பிக்கலாம். தற்போது மதுரை நகரில் ஹெல்மெட் அணிந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகாரித்து உள்ளது.
எனவே ஹெல்மெட் அணிந்து செல்பவர்களை பாராட்டும் விதமாக அவர்களுக்கு இனிப்பு மற்றும் பரிசுகளை வழங்கி வருகிறோம். மேலும் காலை முதல் மாலை வரை ஹெல்மெட் அணியாமல் சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது என்றார்.

Next Story