தொழில் நிறுவனங்கள் சேர்ந்து பயன்பெறலாம் கலெக்டர் கோவிந்தராஜ் தகவல்


தொழில் நிறுவனங்கள் சேர்ந்து பயன்பெறலாம் கலெக்டர் கோவிந்தராஜ் தகவல்
x
தினத்தந்தி 5 Aug 2017 3:45 AM IST (Updated: 5 Aug 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

மின்சார சேமிப்பை மேம்படுத்தும் திட்டத்தில் தொழில் நிறுவனங்கள் சேர்ந்து பயன்பெறலாம் என கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளில் மின்சக்தி மற்றும் எரிசக்திகளின் சேமிப்புக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு மாவட்ட தொழில் மையத்தில் நேற்று நடந்தது. கருத்தரங்கை கலெக்டர் கோவிந்தராஜ் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக அரசால் சட்டப் பேரவையில் தெரிவிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்சார சேமிப்பை மேம்படுத்துவதற்கான ஒரு சிறப்பு திட்டம் ரூ.5 கோடியில் மாநிலம் முழுவதும் ஒதுக்கீடு செய்துள்ளது. கரூர் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெரும்பாலும் ஆயத்த ஆடைகள், ஜவுளி ஆடைகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, கொசுவலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, பஸ்பாடி கட்டுதல், சாம்பல் கல் உற்பத்தி, அட்டை பெட்டி தயாரித்தல் போன்று பல்வேறு தொழில்கள் செய்து வேலைவாய்ப்பினை உருவாக்கி சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.

இதன்மூலம் மாவட்டத்திற்கு அன்னிய செலாவணி வர்த்தகம் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியடைந்து வருகிறது. எரிசக்தி தணிக்கை மற்றும் எரிசக்தி காப்பு மேம்படுத்துதல் மூலமாக அரசு மானியங்கள் வழங்கப்படும்.
மின்சார சேமிப்பை மேம்படுத்தும் திட்டத்தில் உற்பத்தி செய்யும் குறு, சிறு நடுத்தர நிறுவனங்கள் எரிசக்தியை சேமிக்கும் பட்சத்தில், சான்று பெற்ற எரிசக்தி பட்டய கணக்கர்களை கொண்டு தணிக்கை செய்த நிறுவனங்களுக்கு செலவீட்டு தொகையில் 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வழங்கப்படும். மேலும் எரிசக்தி திறன் தணிக்கை அறிக்கையை அமல்படுத்தும் உற்பத்தி நிறுவனங்களுக்கு எந்திர, தளவாடங்கள் மற்றும் எரிசக்தி திறன் மேம்படுத்தும் தொழில் நுட்பத்திற்கும் 25 சதவீதம் மானியம் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் விண்ணப்பம் செய்து பயன் அடையலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கருத்தரங்கில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரெங்கசாமி, பெட்ரோலிய ஆய்வுத்துறை இணை இயக்குனர்கள் சந்திரமோகன், ரமேஷ்கண்ணன், முன்னோடி வங்கி மேலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட தொழில் மைய உதவிப்பொறியாளர் கிரீசன், மேலாளர் காசிராமன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

Next Story