மராட்டியத்தில், 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் தமிழர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு


மராட்டியத்தில், 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் தமிழர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Aug 2017 4:15 AM IST (Updated: 5 Aug 2017 3:39 AM IST)
t-max-icont-min-icon

5 ஆண்டுகளுக்கு மேல் மராட்டியத்தில் வசித்து வரும் தமிழர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.

மும்பை,

5 ஆண்டுகளுக்கு மேல் மராட்டியத்தில் வசித்து வரும் தமிழர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என சட்டசபையில் சமூகநீதித்துறை மந்திரி ராஜ்குமார் பட்டோலே உறுதி அளித்துள்ளார்.

சாதி சான்றிதழ் பிரச்சினை

மராட்டியத்தில் வசிக்கும் பிற மாநிலத்தவர்களில், எஸ்.சி. பிரிவை சேர்ந்தவர்கள் 50 ஆண்டுகளுக்கு மேல் இங்கு வாழ்ந்து வருவதற்கான ஆதாரங்கள் வைத்திருந்தால் அவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதேபோல ஓ.பி.சி. பிரிவினர் 75 ஆண்டுகளுக்கு மேல் மராட்டியத்தில் வசித்து வருவதற்கான ஆதாரங்கள் இருந்தால் அவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்த சட்டத்தால் மும்பை மற்றும் மராட்டியம் முழுவதும் வசித்து வரும் லட்சக்கணக்கான தமிழர்கள் சாதி சான்றிதழ் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். சாதி சான்றிதழ் இல்லாததால் தமிழ் மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் தரமான கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க முடிவதில்லை. அவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பொது இடஒதுக்கீட்டில் தான் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இதேபோல தமிழ் இளைஞர்கள் உரிய தகுதிகள் இருந்தும் மாநில அரசு வேலைகளில் சேருவது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

நீண்டகால கோரிக்கை

எனவே மராட்டியத்தில் வாழும் தமிழர்களுக்கு சாதி சான்றிதழ் கிடைக்க கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசியல் தலைவர்கள் மும்பை வரும்போதெல்லாம், இதுகுறித்த கோரிக்கையை மராட்டிய அரசிடம் வைத்து செல்வார்கள். ஆனால் இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு இல்லாமல் இருந்து வந்தது.

கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ.வும் கடந்த பல ஆண்டுகளாக தமிழர்களுக்கு சாதி சான்றிதழ் கிடைப்பதற்காக போராடி வருகிறார். சட்டமன்றத்திலும் இதுகுறித்து அவர் பலமுறை குரல் கொடுத்து உள்ளார்.

இந்தநிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் சாதி சான்றிதழ் கொடுக்க 75 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பதற்கான ஆதாரங்களை வழங்கவேண்டும் போன்ற நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என வலியுறுத்தினார்.

விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்

இந்தநிலையில் நேற்று சட்டசபையில் மாநில சமூக நீதித்துறை மந்திரி ராஜ்குமார் பட்டோலே, கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ.வின் கோரிக்கை குறித்து பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

மராட்டியத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் தமிழர்கள் மற்றும் பிற மாநிலத்தவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவது பற்றி பரிசீலித்து வருகிறோம். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு சமூக நீதித்துறை மந்திரி பேசினார்.

தமிழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று விரைவில் தமிழர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று உறுதி அளித்த சமூகநீதித்துறை மந்திரிக்கும், முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசிற்கும் நன்றி தெரிவிப்பதாக கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. கூறினார்.


Next Story