குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் முற்றுகை போராட்டம் பெண்கள் உள்பட 54 பேர் கைது


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் முற்றுகை போராட்டம் பெண்கள் உள்பட 54 பேர் கைது
x
தினத்தந்தி 5 Aug 2017 4:03 AM IST (Updated: 5 Aug 2017 4:02 AM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 54 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மகனூர்பட்டி ஊராட்சி குருபரவலசை கிராமத்திற்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பகுதி செயலாளர் எத்திராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் கண்ணன், வட்டக்குழு உறுப்பினர் ராஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இந்த போராட்டத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவிந்தசாமி தொடங்கி வைத்து பேசினார். அப்போது மகனூர்பட்டி ஊராட்சிக்குட்பட்ட குருபரவலசை கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வறட்சியின் காரணமாக இந்த பகுதியில் அரசு அமைத்து கொடுத்த ஆழ்துளை கிணறுகளும் வறண்டு விட்டது.

இதனால் இந்த கிராமத்திற்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில் பெண்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 26 பெண்கள் உள்பட 54 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் போலீசார் அடைத்தனர். மாலை அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Next Story