பள்ளி மாணவனை கடத்திய மர்ம கும்பலை கைது செய்யக்கோரி சாலைமறியல்


பள்ளி மாணவனை கடத்திய மர்ம கும்பலை கைது செய்யக்கோரி சாலைமறியல்
x
தினத்தந்தி 5 Aug 2017 4:06 AM IST (Updated: 5 Aug 2017 4:06 AM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே பள்ளி மாணவனை காரில் கடத்திய மர்ம கும்பலை கைதுசெய்யக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் ரஷீத்(வயது 45). இவர் அனுமந்தபுரத்தில் குடிநீர் கேன்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் நவாஷ்(15). இவன் அனுமந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிடுவதற்காக நவாஷ் வீட்டிற்கு சென்றான். பின்னர் வீட்டில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் பள்ளிக்கு நடந்து வந்து கொண்டிருந்தான்.

வழியில் அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயம் முன்பு நடந்து சென்றுகொண்டிருந்தபோது கார் ஒன்று வேகமாக வந்து நவாஷ் அருகே நின்றுள்ளது. அதில் 3 பேர் இருந்துள்ளனர். காரில் இருந்த ஒருவன் நவாஷை நிறுத்தி கையிலிருந்த காகிதத்தை காண்பித்து இந்த முகவரி எங்கு உள்ளது என கேட்டுள்ளான். அதற்கு நவாஷ், தனக்கு அந்த முகவரி தெரியாது என்று சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றான்.

அப்போது காரில் இருந்து இறங்கிய ஒருவன் தனது கையில் இருந்த மயக்க மருந்து தடவிய கைக்குட்டையால் நவாஷின் மூக்கை மூடி வலுக்கட்டாயமாக காரில் ஏற்றினான். பின்னர் சிறிது நேரத்தில் மாணவன் மயங்கி விட்டான். இதைத் தொடர்ந்து அங்கிருந்து காரில் மர்மகும்பல் மாணவனை கடத்தி சென்றது. வழியில் எலுமிச்சனஅள்ளி பாலம் அருகில் கார் நிறுத்தப்பட்டது. அப்போது மர்ம கும்பலில் இருந்த ஒருவன் கீழே இறங்கி செல்போனில் பேசிக்கொண்டிருந்தான்.

அந்த நேரம் மயக்கம் தெளிந்த நவாஷ் சுதாரித்துக்கொண்டு காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டான். பின்னர் அவன் அனுமந்தபுரத்திற்கு சென்று, இதுகுறித்து அங்கிருந்த பொதுமக்களிடம் தெரிவித்துள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது தொடர்பாக காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

ஆனால் போலீசார் வர தாமதமானதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாலக்கோடு காரிமங்கலம் சாலைக்கு திரண்டு வந்து மாணவனை கடத்திய கும்பலை கைது செய்யக்கோரி சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் மற்றும் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் இளவரசன், அந்தோணிசாமி ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை காரில் கடத்திய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். பள்ளி மாணவனை பட்டப்பகலில் மர்ம கும்பல் காரில் கடத்திய சம்பவம் அனுமந்தபுரம் பகுதியில் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story