நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்திற்குள் அனுமதிக்காதது துரதிருஷ்டமான முடிவு - கிரண்பெடி
நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்திற்குள் அனுமதிக்காதது துரதிருஷ்டவசமான முடிவு என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.
புதுச்சேரி,
புதுவை நாட்டுநலப் பணித்திட்ட கடற்படை பிரிவு மாணவர்கள் ஆண்டுதோறும் கடற்சாகச பாய்மர படகு பயணம் மேற்கொள்வார்கள். இந்த ஆண்டு சமுத்ரா பிரம்மன்-2017 என்ற பெயரில் புதுவையில் இருந்து தோப்புதுறைக்கு சாகச பயணம் மேற்கொள்கின்றனர்.
அதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பெடி கலந்து கொண்டு கொடியசைத்து கடற்சாகச பயணத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவருக்கு கடற்படை அதிகாரிகள் நினைவு பரிசு வழங்கினார்கள்.கமாண்டர் விஜேஷ் குமார் கர்க், கர்னல் சதீஷ் குமார் குப்தா மற்றும் பலர் நிகழ்ச்சி யில் கலந்து கொண்டனர். இந்த சாகச பயணத்தில் துணை கமாண்டர் ரமேஷ் தலைமையில் அதிகாரிகள் குணசேகரன், பாண்டியன் மற்றும் 10 என்.சி.சி. மாணவிகள் உள்பட 30 பேர் கலந்து கொண்டனர்.
இந்த சாகச பயணம் புதுவையில் தொடங்கி கடலூர், பழையார், பூம்புகார், நாகப்பட்டினம், தோப்புதுறை வரை சென்று மீண்டும் புதுவை திரும்புகின்றது.
துரதிருஷ்டவசமான முடிவு
இதன்பின் கவர்னர் கிரண்பெடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுவையில் சட்டத்திற்கு உட்பட்டே 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை சட்டமன்றத்திற்குள் அனுமதிக்காதது துரதிருஷ்டவசமான முடிவு. சபாநாயகர் இதை தவிர்த்திருக்க வேண்டும். பிளாஸ்டிக் குப்பைகளை பொதுமக்கள் வாய்க்கால்களில் வீசி எறிகின்றனர். இது கழிவுநீருடன் கடலில் சென்று கலக்கிறது. அதை அகற்ற பல கோடி ரூபாய் வீணாகிறது.
குப்பைகளை கழிவுநீர் வாய்க்காலில் எறியாமல் முறையாக அப்புறப்படுத்தினால் அந்த நிதியை கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டிற்காக பயன்படுத்தலாம். அரசின் சில நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம், பென்ஷன் ஆகியவை வழங்கப்படாமல் உள்ளது. எனவே நிதியை வீண் விரயம் செய்யக்கூடாது. நிதியை பயனளிக்கும் வகையில் செலவு செய்ய வேண்டும். எனவே பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை வாய்க்காலில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி
கடந்த 2, 3 நாட்களாக அரசு பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்தேன். அரசு பள்ளிகளில் தரமான அடிப்படை வசதிகள் உள்ளன. ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர். துணை முதல்வர், கணக்கு, அறிவியல் ஆசிரியர்கள் இல்லை என்ற குறை உள்ளது. அந்த இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்துள்ளேன். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்ட வேண்டும். மாணவர்களுக்கு சிறப்பான கல்வி அளிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story