முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்தநாள் விழா


முன்னாள் முதல்-அமைச்சர்  ரங்கசாமி பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 5 Aug 2017 4:10 AM IST (Updated: 5 Aug 2017 4:10 AM IST)
t-max-icont-min-icon

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினர். பிறந்தநாளையொட்டி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் கோவில்களில் தங்கத்தேர் இழுத்து, சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

புதுச்சேரி,

புதுவை முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவருமான ரங்கசாமி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதையொட்டி காலையில் எழுந்து புத்தாடை அணிந்த அவர் தனது வீட்டில் தொண்டர்கள் மத்தியில் பிறந்தநாள் கேக் வெட்டி அவர்களுக்கு வழங்கினார்.

அதன்பின் கதிர்காமம் முருகன் கோவிலுக்கு ரங்கசாமி சென்றார். அங்கு நடந்த சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை நடத்தி ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார்.

அன்னதானம்

பிறந்தநாள் கொண்டாடிய ரங்கசாமிக்கு தொண்டர்கள் திரளாக வந்து ஆளுயர மாலை, பூங்கொத்துகள், பழங்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

எம்.எல்.ஏ.க்கள் சுகுமாரன், கோபிகா, என்.எஸ்.ஜே.ஜெயபால், டி.பி.ஆர்.செல்வம், பா.ஜ.க.வைச் சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி மற்றும் முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், தியாகராஜன், ராஜவேலு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாலன், நேரு, கந்தன் கருணை பேரவை தலைவர் கந்தன் நாராயணசாமி, முன்னாள் வாரிய தலைவர் சிவகந்தன், என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் பிரகாஷ்குமார், ராஜகோபால், முருகையன், ராஜா, தாஸ், புதுவை வர்த்தக சபை தலைவர் செண்பகராஜன், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் தெய்வீகன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

தங்கத்தேர்

மணக்குள விநாயகர் கோவிலில் என்.ஆர்.காங்கிரசார் தங்கத்தேர் இழுத்தனர். அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடந்தன. என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தொண்டர்களுக்கு அன்னதானம், மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. பிறந்தநாளையொட்டி ரங்கசாமியின் வீட்டிற்கு செல்லும் வழுதாவூர் சாலை விழாக்கோலம் பூண்டிருந்தது.

Next Story