துறைமுகத்தை சுற்றுலாதலமாக்குவது முடியாத காரியம் கவர்னர் கிரண்பெடி வேதனை
துறைமுகத்தை சுற்றுலாதலமாக்குவது என்பது முடியாத காரியம். இந்த திட்டத்தால் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு தான் பயன் தரும் என்று கவர்னர் கிரண்பெடி வேதனை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவையில் கப்பல் மூலம் சரக்கு போக்குவரத்தை தொடங்குவது, கடற்கரையில் செயற்கை மணல் பரப்பினை உருவாக்குவது போன்ற திட்டங்களை செயல்படுத்த தற்போது நடவடிக்கைகள் எடுக் கப்பட்டு வருகின்றன. இவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்று சில சமூக அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இதுகுறித்து புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
துறைமுக சீரமைப்பு பணிகள் மூலம் கடலில் கொட்டப்படும் மணல் மற்றும் தண்ணீரால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்று புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்காணிக்க வேண்டும்.
புதுவை துறைமுக பகுதியில் மணல் தேங்குவது என்பது தீர்க்க முடியாத பிரச்சினையாகவே இருக்கும். அங்கு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தும் நேரத்தில் இன்னும் பிரச்சினைகள்தான் அதிகரிக்கும். மேலும் துறைமுக திட்டம், கடற்கரை சீரமைப்பு திட்டம் போன்றவை அரசியல்வாதிகளுக்கு தங்க முட்டையிடும் ஒன்றாக இருக்கலாம்.
முடியாத காரியம்
அங்குள்ள மணலை வெளியேற்றும் பணிக்கு செலவிடும் பணத்தை மீனவர் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கலாம். அல்லது துறைமுகத்தை வேறொரு சுற்றுலா தலமாக மாற்ற முயற்சிக்கலாம். அது சுற்றுச்சூழலுக்கும், பொருளாதாரத்துக்கும் நன்மை அளிப்பதாக இருக்கும். துறைமுக திட்டத்தை கைவிடும்வரை பிரச்சினை நீடித்துக்கொண்டேதான் இருக்கும். பிரெஞ்சு கால துறைமுகத்தைப்போல் மீண்டும் கொண்டுவருவது முடியாத காரியம். அது தோல்வியில்தான் முடியும். நாம் வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது இல்லை.
இதுபோன்ற திட்டங்களுக்கு போடப்படும் பணம் காண்டிராக்டர்கள், அரசியல்வாதிகள், அவர்களுக்கு துணையாக இருக்கும் அதிகாரிகள் ஆகியோரின் பைக்குள் மட்டும்தான் செல்லும்.
இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story