கேரளாவுக்கு நிகராக சாதனை குமரி மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவு


கேரளாவுக்கு நிகராக சாதனை குமரி மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவு
x
தினத்தந்தி 5 Aug 2017 4:44 AM IST (Updated: 5 Aug 2017 4:44 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதால் குமரி மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. இது கேரளாவுக்கு நிகரான சாதனையாகும் என்று ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி டீன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் அருகே வில்லுக்குறியை அடுத்த காரவிளையைச் சேர்ந்தவர் ராஜகுமார். கட்டிடத் தொழிலாளி. இவருடைய மனைவி மீனா (வயது 28). இவர்களுக்கு ஏற்கனவே 4 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்தநிலையில் மீனா 2-வது முறையாக கர்ப்பமானார். 8 மாதமாக இருந்தபோது அவருக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. உடனே அவரை நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கடந்த மாதம் 5-ந் தேதி இரவு 11.15 மணி அளவில் அவருக்கு நடந்த சுகப் பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தையும், 2 பெண் குழந்தைகளும் பிறந்தன.

அந்த 3 குழந்தைகளும் எடை குறைவாக இருந்தன. அதாவது ஒரு குழந்தை 1 கிலோ 800 கிராமும், இன்னொரு குழந்தை ஒரு கிலோ 500 கிராமும், மற்றொரு குழந்தை ஒரு கிலோ 300 கிராமும் இருந்தன. எடை குறைவு, குறைமாத பிரசவம், மூச்சுத் திணறல் போன்ற காரணங்களால் 3 குழந்தைகளும் ஆஸ்பத்திரியில் உள்ள பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அந்த குழந்தைகளுக்கு பச்சிளம் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் ரமேஷ்குமார் தலைமையிலான டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

தற்போது 3 குழந்தைகளுக்கும் எடை சிறிது அதிகரித்துள்ளது. தாயும், சேய்களும் பூரண நலத்துடன் உள்ளனர். இதையடுத்து நேற்று மீனாவும், குழந்தைகளும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

முன்னதாக குழந்தைகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும், ஆஸ்பத்திரியில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான நவீன சிகிச்சைகள் குறித்தும் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி டீன் (பொறுப்பு) டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

தமிழகத்தில் பிறக்கும் 1000 பச்சிளம் குழந்தைகளில் (ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்) 19 குழந்தைகள் இறப்பதாக ஆய்வுகளின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் குமரி மாவட்டத்தில் 1000 பச்சிளம் குழந்தைகளில் 6 குழந்தைகள் தான் இறக்கின்றன. கேரளாவுக்கு சமமாக இது சாதனையாக கருதப்படுகிறது. அதற்கு காரணம் பச்சிளம் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளும், கண்காணிப்புமே ஆகும். கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இயங்கி வரும் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மாதந்தோறும் 100 முதல் 125 பச்சிளம் குழந்தைகள் வரை குறைமாத குழந்தைகள், எடை குறைந்த குழந்தைகள், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக இந்த பிரிவில் அனுமதிக்கப்பட்டு பூரண நலம் பெற்று அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இந்தப்பிரிவில் பணியாற்றி வரும் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் டாக்டர் ரமேஷ்குமார் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

பச்சிளம் குழந்தைகளுக்கு 24 மணி நேரமும் செவிலியர் கண்காணிப்பு இருந்து வருகிறது. மீனாவுக்கு ஒரே பிரசவத்தில் எடை குறைவாக பிறந்த 3 குழந்தைகளுக்கும் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டதின் மூலம் எடையும் அதிகரித்துள்ளது. அந்த குழந்தைகளும், தாயாரும் இன்று (அதாவது நேற்று) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இந்த பிரிவில் உயிர்காக்கும் நவீன சிகிச்சைகள், வாமர் கருவிகள், விலை உயர்ந்த மருந்துகள் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

ஒரே பிரசவத்தில் எடை குறைவாக பிறந்த 3 குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்த பச்சிளம் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் ரமேஷ்குமார் கூறியவதாவது:-

மீனாவுக்கு ஒரே பிரசவத்தில் எடை குறைவாக பிறந்த 3 குழநதைகளுக்கும் சிறப்பு சிகிச்சை மற்றும் உயிர்காப்பான் மருந்துகள் அளிக்கப்பட்டது. 40 வாரத்தில் பிறக்க வேண்டிய இந்த குழந்தைகள், 33 வாரத்தில் பிறந்து விட்டன. இந்த குழந்தைகளுக்கு கண் மற்றும் மூளை ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த சிகிச்சை தனியார் மருத்துவமனையில் பெற்றிருந்தால் 3 குழந்தைகளுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வீதம் 28 நாட்களுக்கு ரூ.10 லட்சம் வரை செலவாக வாய்ப்புள்ளது. அதே சிகிச்சை இந்த 3 குழந்தைகளுக்கும் இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது.

பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் ரூ.12 லட்சம் மதிப்பிலான எக்கோ மெஷின் உள்ளது. இதன்மூலம் கண், மூளை, இருதய செயல்பாடு உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். 3 குழந்தைகளுக்கும் மூளை மற்றும் இருதய செயல்பாடு நல்ல நிலையில் உள்ளது. 3 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு மட்டும் குடலில் ஒரு ஓட்டை இருந்தது. மருந்து கொடுத்து அந்த ஓட்டையும் சரியாகி விட்டது. இந்த குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பி வைத்தாலும், திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் அந்த குழந்தைகளை கொண்டுவரச் செய்து தொடர்ந்து கண்காணிப்போம்.

குழந்தை 2 கிலோ எடை வரும் வரை இந்த கண்காணிப்பு இருக்கும். தற்போது இந்த குழந்தைகளின் எடை அதிகரித்துள்ளது. இதேபோல் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் 1 கிலோ முதல் 1½ கிலோ எடை வரையிலான 6 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றன. எடை குறைவாக பிறந்த ஒரு குழந்தைக்கு பிறவியிலேயே ஏற்பட்டிருந்த குடல் பிரச்சினைக்கு நேற்று (அதாவது நேற்று முன்தினம்) அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது நலமாக உள்ளது.
இவ்வாறு டாக்டர் ரமேஷ்குமார் கூறினார்.

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளைப் பெற்றெடுத்த மீனா கூறும்போது, “எனது 3 குழந்தைகளுக்கும் சிறப்பாக சிகிச்சை அளித்த டாக்டர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்“ என்றார். பேட்டியின்போது டாக்டர்கள் அசோக் குமார், ஆறுமுகவேலன், லியோடேவிட் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story