எரிசக்தி சிறப்பு சேமிப்பு திட்டத்தின் கீழ் 50 நிறுவனங்களுக்கு ரூ.36 லட்சம் மானியம் கலெக்டர் பிரபாகர் தகவல்


எரிசக்தி சிறப்பு சேமிப்பு திட்டத்தின் கீழ் 50 நிறுவனங்களுக்கு ரூ.36 லட்சம் மானியம் கலெக்டர் பிரபாகர் தகவல்
x
தினத்தந்தி 5 Aug 2017 4:59 AM IST (Updated: 5 Aug 2017 4:59 AM IST)
t-max-icont-min-icon

எரிசக்தி சிறப்பு சேமிப்பு திட்டத்தின் கீழ் 50 நிறுவனங்களுக்கு ரூ.36 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் ஈரோட்டில் உள்ள ஈடிசியா கூட்டரங்கில் எரிசக்தி கணக்கீடு மற்றும் எரிசக்தி சேமிப்பினை மேம்படுத்துவது தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்குக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தமது உற்பத்தி மற்றும் சேவை நடவடிக்கைகளுக்காக மின்சாரம், நிலக்கரி, விறகுகள், டீசல் போன்ற எரிபொருட்களை தினமும் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றன. இதனால் எரி பொருட்களின் இயற்கை வள ஆதாரங்கள் குறைந்து கொண்டே வருவதாலும், தொழில் நிறுவனங்களில் உற்பத்தி செலவு அதிகரித்து வருவதாலும், தற்போது எரிபொருள் சேமிப்பு என்பது தவிர்க்க இயலாத நடவடிக்கை ஆகும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களின் எரிசக்தி பயன்பாட்டு திறனை மேம்படுத்திக்கொள்ளும் பொருட்டு தமிழக அரசு சிறப்புத்திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது. எனவே தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் எரிசக்தி தணிக்கையினை செயல்படுத்தி, எரிபொருள் ஆற்றலினை சேமிக்கும் நடவடிக்கையினை ஊக்கப்படுத்தவேண்டும்.

தமிழக அரசால் சிறு, குறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்களில் மேற்கண்ட ஆற்றல் தணிக்கை ஆய்வுகளுக்கு செலுத்திய தொகையில், பின்முனை மானியமாக 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரை ஒவ்வொரு நிறுவனத்துக்கும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 50 சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.36 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது.

எரிபொருள் ஆற்றல் சேமிப்பிற்காக புதிதாக நிறுவப்படும் ஆற்றல் திறன் குறைபாட்டால் மாற்றியமைக்கப்படும் உபகரணங்கள், எந்திரங்கள், உதிரி பாகங்களுக்கும், இயங்கிக்கொண்டு இருக்கும் உபகரணங்கள், உபகரணங்களில் மாற்றங்கள் செய்து நவீனப்படுத்தப்படும். செலவினங்களுக்கும் 25 சதவீதம் பின்முனை மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை ஒவ்வொரு நிறுவனத்துக்கும் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் முதன்முறையாக எரிபொருள் ஆற்றல் தணிக்கை மற்றும் சேமிப்பிற்காக விண்ணப்பிக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்கனவே இத்தகைய மானியம் பெற்று 3 ஆண்டுகள் கழித்து மீண்டும் விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் ஆகியவை பங்கேற்று பயன்பெறலாம். இதன் மூலம் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள், அரிசி ஆலைகள், துணி மற்றும் நூல் பதனிடுதல் மற்றும் உணவு பொருட்கள் உற்பத்தி, பொறியியல் தொழிற்சாலைகள், நூற்பாலைகள், தென்னை நார் தொழிற்சாலைகள் பயன்பெறலாம்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறினார்.

அதைத்தொடர்ந்து நடந்த கருத்தரங்கில் எரிபொருள் ஆற்றல் தணிக்கை தொடர்பான தொழில்நுட்பங்கள், ஆற்றல் சேமிப்பு நடவடிக்கை தொடர்பான விவரங்கள், தேசிய சிறு தொழில் வளர்ச்சி வங்கி எரிசக்தி தணிக்கையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களால் விளக்கப்பட்டது.
கருத்தரங்கில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராசுமணி, மாவட்ட சிறு தொழில்கள் சங்க தலைவர் வெங்கடேஷ் மற்றும் அரசு அதிகாரிகள், தொழிற்சாலை உரிமையாளர்கள் கலந்துகொண்டார்கள்.

Next Story