எய்ட்ஸ் நோய்க்கு பசுக்களின் ‘விடை’


எய்ட்ஸ் நோய்க்கு பசுக்களின் ‘விடை’
x
தினத்தந்தி 5 Aug 2017 4:00 PM IST (Updated: 5 Aug 2017 3:18 PM IST)
t-max-icont-min-icon

எச்.ஐ.வி. வைரசுக்கு எதிரான ஒரு பொருள், பசுக்களின் உடலில் வேகமாக உற்பத்தியாகி உள்ளது.

ய்ட்ஸ் நோய்க்குக் காரணமான எச்.ஐ.வி. வைரசை சமாளிக்க, வியப்பூட்டக்கூடிய, புரிந்துகொள்ள முடியாத வகையிலான ஆற்றலை பசுக்கள் வெளிப்படுத்தி இருப்பதாகவும் அது எய்ட்ஸ் நோய்க்கான தடுப்பு மருந்தை உருவாக்கப் பயன்படலாம் என்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான ஆய்வில், எச்.ஐ.வி. வைரசுக்கு எதிரான ஒரு பொருள், பசுக்களின் உடலில் வேகமாக உற்பத்தியாகி உள்ளது.

மிகவும் சிக்கலான, பாக்டீரியாக்கள் நிறைந்த செரிமான அமைப்பை மாடுகள் கொண்டுள்ளதால், இந்த உச்சபட்ச நோய் எதிர்ப்பை அவை பெற்றுள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்த ஆய்வு முடிவுகள் மிகவும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன என்று அமெரிக்காவின் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹெல்த் கூறியுள்ளது.

இன்டர்நேஷனல் எய்ட்ஸ் வேக்சின் இனிசியேட்டிவ் மற்றும் ஸ்க்ரிப்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிட்யூடைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பசுக்களுக்கு நோய்க்காப்பு அளிக்க முற்பட்டனர்.

‘அதன் முடிவுகள் எங்களைத் திகைப்படையச் செய்தது’ என்று ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர் டெவின் சாக் கூறுகிறார்.

அதாவது, சில வார காலத்திலேயே மாடுகளின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு எச்.ஐ.வி. வைரசை தடுக்கத் தேவையான நோய் எதிர்ப்பொருட்களை உற்பத்தி செய்துகொண்டது.

“இது புரிந்துகொள்ள முடியாத அதிசயம் ஆகும். இதே மாதிரியான நோய் எதிர்ப்பொருட்களை உருவாக்க மனித உடலுக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும்” என்கிறார் சாக்.

“இது மிகவும் முக்கியமானது. ஏனெனில் பல காலமாக நம்மால் இதைச் செய்ய முடியவில்லை. மாடுகளின் உயிரியல், எச்.ஐ.வி. ஆய்வில் முக்கியப் பங்களிக்கும் என்று யாரும் நினைத்திருக்க முடியாது” என்று அவர் கூறுகிறார்.

‘நேச்சர்’ ஆய்வு இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு முடிவுகளின்படி, மாடுகளின் உடலில் உற்பத்தி ஆகியுள்ள நோய் எதிர்ப்பொருட்களால் 20 சதவீத எச்.ஐ.வி. தொற்றை 42 நாட்களுக்குள் நீக்க முடியும்.

381 நாட்கள் ஆகும்போது, ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட 96 சதவீத எச்.ஐ.வி. நோய்த் தொற்றுக்களை அவற்றால் நீக்க முடிந்தது.

“திறன்மிகுந்த இந்த ஆய்வு முடிவுகள் மிகவும் குறிப்பிடத்தகுந்தவை” என்கிறார், ஆய்வுக் குழுவைச் சேர்ந்த இன்னொரு ஆய்வாளரான டாக்டர் டென்னிஸ் பர்ட்டன்.

“மனித நோய் எதிர்ப்பொருட்களைப் போல் அல்லாமல், கால்நடைகளின் உடலில் உருவாகும் நோய் எதிர்ப்பொருட்கள், தனித்துவமான தன்மைகளைக் கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளதுடன், எச்.ஐ.வி. வைரசுக்கு எதிராக அதிகத் திறன் பெற்றும் இருக்கலாம்” என்றார் அவர்.

பசு மாடுகளின் நோய் எதிர்ப்பு அமைப்பு, எச்.ஐ.வி.க்கு எதிரான இந்த எதிர்ப்பொருட்களை சுலபமாக உருவாக்குகிறது.

புற்களை நொதிப்படுத்த, அவற்றை அசைபோட்டு செரிமானம் செய்யக்கூடிய, மாடுகளின் செரிமான அமைப்பு மோசமான பாக்டீரியாக்களுக்கு கட்டுப்பாடற்ற வாழ்விடமாக இருக்கிறது என்று கருதப்படுகிறது. அதனால் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைக்க அவை அந்த எதிர்ப்பொருட்களை சுரக்கத் தொடங்கின.

பாலுறுப்பில் ஏற்படும் எச்.ஐ.வி. தொற்றைத் தடுக்க அதிக திறனுள்ள நுண்ணுயிர்க்கொல்லிகளை உருவாக்கும் மருந்துகளைத் தயாரிக்க கால்நடைகள் சிறந்த மூலாதாரங்களாக இருக்கும் என்பது இதன் மூலம் தெரிகிறது.

ஆனால் மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு இது போன்ற எதிர்ப்பொருட்களை உண்டாக்க வைத்து எச்.ஐ.வி. தொற்றுக்கு எதிராகப் போரிடுவதே விஞ்ஞானிகளின் முக்கிய இலக்காக உள்ளது. அது மிகப் பெரிய சவால் என்றாலும், கால்நடைகள் மீதான ஆய்வு அதற்கு உதவக்கூடும்.

Next Story